Published : 29 Aug 2017 10:11 AM
Last Updated : 29 Aug 2017 10:11 AM

வெள்ளத்தில் மூழ்கிய ஹுஸ்டன் மாநகரம்: சுமார் 200 இந்திய மாணவர்கள் பரிதவிப்பு

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஹுஸ்டன் மாநகரம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் ஹார்வி சூறாவளி காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் 4-வது பெரிய மாநகரமான ஹுஸ்டன் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

மாநகரின் அனைத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனப் போக்குவரத்து முடங்கி உள்ளது. பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பலர் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். சிலர் கூரை மீது ஏறி உதவி கோரி வருகின்றனர்.

மேலும் பலர் சமூக இணையதளங்கள் மூலம் உதவி கோரி உள்ளனர். இந்நிலையில், சிறிய படகு வைத்திருப்பவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவுமாறு ஹுஸ்டன் போலீஸார் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து ‘காஜுன் நேவி’ என்ற தன்னார்வ அமைப்பு படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்குள்ள இந்திய மாணவர்களும் வெள்ளத்தில் சிக்கியிருப்பது தெரியிவந்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் கூறும்போது, “ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சுமார் 200 இந்திய மாணவர்கள் கழுத்தளவு வெள்ளத்துக்கு நடுவே சிக்கி இருப்பதாக அங்குள்ள துணைத் தூதர் அனுபம் ராய் தெரிவித்துள்ளார். அவர்களைப் பத்திரமாக மீட்க ராய் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஷாலினி, நிகில் பாட்டியா ஆகிய இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவின் சில மாகாணாங்களை கத்ரினா சூறாவளி தாக்கியது. இதனால் பேரழிவு ஏற்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதுபோன்ற தாக்குதலை ஹார்வி சூறாவளி ஏற்படுத்தி உள்ளது.

ஹுஸ்டன் நகரில் இதுவரை 27 அங்குல மழை பதிவாகி உள்ளது. மேலும் 23 அங்குல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x