Published : 09 Aug 2017 08:46 AM
Last Updated : 09 Aug 2017 08:46 AM

உலக மசாலா: இது செடியா, மரமா!

உலகிலேயே மிகப் பெரிய ரோஜா செடி அரிசோனாவில் உள்ள டம்ப்ஸ்டோனில் இருக்கிறது! இந்த ரோஜா செடியின் அடிப்பாகம் 12 அடி அகலம். 9 ஆயிரம் சதுர அடி தூரத்துக்குக் கிளை பரப்பியிருக்கிறது. 1885-ம் ஆண்டில் நடப்பட்ட இந்தச் செடிக்கு 132 வயது. இன்றும் வசந்த காலத்தில் பூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கிறது! 1884-ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹென்றி கீயும் அவருடைய மனைவி மேரியும் அமெரிக்கா வந்தனர். அழகான பூக்கள் நிறைந்த தங்களின் ஸ்காட்லாந்து தோட்டத்தை நினைத்து ஏங்கினார் மேரி. ஸ்காட்லாந்துக்குக் கடிதம் எழுதினார். ஒரு பெட்டி நிறைய செடிகளும் விதைகளும் அரிசோனாவுக்கு வந்து சேர்ந்தன. மேரியின் பக்கத்து வீட்டுக்காரர் அமெலியா ஆடம்சன். நட்புக்காக அவருக்கும் ஒரு ரோஜா செடியைப் பரிசாக அளித்தார் மேரி. இருவரும் செடிகளைத் தங்கள் தோட்டத்தில் நட்டனர். அரிசோனா பாலைவனப் பிரதேசம் என்பதால் அங்கே ரோஜா போன்ற செடிகள் வளர வாய்ப்பில்லை என்று அதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் ரோஜா செடி செழித்து வளர்ந்ததோடு மட்டுமின்றி, உலகின் மிகப் பெரிய ரோஜா செடி என்ற பெயரையும் பெற்றுவிட்டது! 1920-ம் ஆண்டு அந்த வீட்டுக்கு ஜேம்ஸும் எதெல் மசியாவும் குடிவந்தனர். அப்போதே ரோஜா மிகப் பெரிய செடியாகக் கிளை பரப்பியிருந்தது. செடியின் வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் இந்தத் தம்பதியர், உலோகக் கம்பிகளை ஆங்காங்கே வைத்தனர். இதற்குப் பிறகு செடி மேலும் பெரிதாக வளர ஆரம்பித்தது. 1993-ம் ஆண்டு ஜான் ஹிக்ஸ், ‘உலகின் மிகப் பெரிய ரோஜா மரம்’ என்று குறிப்பிட்டு, இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று அறிவித்தார். 1937-ம் ஆண்டு ராபர் ரிப்ளே, ரோஜாவைப் பார்ப்பதற்காக வந்தார். பிரமித்துப் போனார். அவர் மூலம் ‘உலகின் மிகப் பெரிய ரோஜா செடி’ என்ற கின்னஸ் சாதனையும் எளிதாகக் கிடைத்துவிட்டது. இன்றுவரை இந்தச் சாதனையை வேறு எந்த ரோஜா செடியும் முறியடிக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஏப்ரல் வரை 6 ஆறு வாரங்கள் ரோஜாக்கள் பூக்கின்றன. இந்த நிகழ்வை ஒரு விழாவாக நடத்துகிறார்கள். ரோஜா செடியையும் ஆயிரக்கணக்கான வெள்ளை ரோஜாக்களையும் கண்டுகளிக்கிறார்கள்.

இது செடியா, மரமா!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள டிஜிட்டல் விளம்பர நிறுவனம் ஒன்று, தன் ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காகச் செல்லப் பிராணிகளை அனுமதித்திருக்கிறது. ஒரு கையில் மவுஸும் இன்னொரு கையில் நாயையும் வைத்துக்கொண்டு வேலை செய்கிறார்கள். “எங்கள் ஊழியர்கள் வேலையில் மூழ்கிவிடுவதால், அவர்கள் எளிதில் மனத்தாலும் உடலாலும் சோர்வடைந்துவிடுகின்றனர். அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே செல்லப் பிராணிகளை அனுமதித்திருக்கிறேன். இதனால் வேலையில் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை. நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வேலை செய்கிறார்கள். ஓராண்டில் கிடைத்த இந்த அனுபவத்தால், தொடர்ந்து செல்லப் பிராணிகளை அலுவலகத்தில் அனுமதிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்கிறார் மேலாளர் அங்கனாட் கோங்பானிச்.

அலுவலகம் செல்லும் செல்லப் பிராணிகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x