Published : 03 Aug 2017 10:40 AM
Last Updated : 03 Aug 2017 10:40 AM

உலக மசாலா: வீட்டுக்குள்ளிருந்தே உலகம் சுற்றி வந்தவர்!

ஸ்திரேலியாவில் வசிக்கும் 43 வயது ஜாக்கி கென்னி, கடந்த 20 ஆண்டுகளாக agoraphobia என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பொது இடங்களைக் கண்டால் இவருக்கு ஒருவித பயம் வந்துவிடும். இந்த இடம் ஆபத்தானது, பாதுகாப்பு இல்லாதது, விரைவாக வீட்டுக்கு ஓடிவிட வேண்டும் என்று தோன்றும். வீட்டிலிருந்து 2 நிமிட தூரத்தில் இருந்த அலுவலகத்துக்கு செல்லும்போது, 23-வது வயதில் முதல் முறையாக இந்தப் பயம் இவருக்கு ஏற்பட்டது. காரணம் ஒன்றும் புரியவில்லை. பயம், தூக்கமின்மை போன்ற காரணங்களால் கென்னி மிகவும் பாதிக்கப்பட்டார். “எனக்கு ஏதோ பிரச்சினை என்று நான் விரைவில் கண்டுகொண்டேன். உடனே மருத்துவரிடம் சென்றேன். அவர் நான் சாப்பிட்ட உணவுகளில் ஏதோ கோளாறு என்று கூறி அனுப்பிவிட்டார். என் பிரச்சினையை மருத்துவர் கூடப் புரிந்துகொள்ளவில்லையே என்று தோன்றியது. மேலும் சில மருத்துவர்களைப் பார்த்தேன். அவர்களாலும் எனக்கு என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் தீவிரமான மன அழுத்தத்துக்குச் சென்றேன். வீட்டை விட்டு வெளியே வந்தாலே பயம் அதிகமானது. அதனால் வேலையை விட்டுவிட்டேன். வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கொண்டேன். காலங்கள் சென்றன. 8 ஆண்டுகளுக்கு முன்புதான் எனக்கு பொது இடங்களைக் கண்டால் பயம் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். சிகிச்சை ஆரம்பமானது. 3 மாதங்கள் சிகிச்சை எடுத்தும் பயமும் போகவில்லை, தூக்கமும் வரவில்லை.

என் பிரச்சினையிலிருந்து நானே வெளிவர முடிவு செய்தேன். ஒரு புகைப்படக்காரராக ஆக வேண்டும் என்பதும் உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்பதும்தான் என் லட்சியமாக ஆரம்பத்தில் இருந்தது. இந்த லட்சியத்துக்குப் பயம் தடையாக இருந்ததால் அதை மறந்திருந்தேன். இப்போது அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என்னால் வெளியே செல்ல முடியாது என்பதால், கூகுள் ஸ்ட்ரீட் வியூவுக்கு சென்று விதவிதமான வீதிகளை கவனிக்க ஆரம்பித்தேன். உள்ளூர் வீதிகளில் இருந்து உலக வீதிகள் வரை என் தேடல் சென்றது. பல விதமான மக்களை சந்தித்தேன். பல நாட்டு கலாசாரங்களை அறிந்துகொண்டேன். எனக்குப் பிடித்த புகைப்படங்களை சேகரித்துக்கொண்டேன். இந்தப் புகைப்படங்களை எடுத்து, திருத்தம் செய்து, என் பிரச்சினையையும் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டேன். என் பயம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. தொடர்ச்சியாக இந்த வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன். வீட்டை விட்டு வெளியே வராமலே, உலகம் முழுவதும் சுற்றி வந்துவிட்டேன். இதுவரை 26 ஆயிரம் புகைப்படங்களை சேகரித்து வைத்திருக்கிறேன். என் பயம் வெகுவாகக் குறைந்துவிட்டது. மனநிலையில் மாற்றம் தெரிகிறது. அருகில் இருக்கும் கடைத் தெருவுக்குச் சென்று வருகிறேன். என் தங்கையின் திருமணத்துக்காக அமெரிக்கா உட்பட மூன்று வெளிநாடுகளுக்கு சென்று வந்தேன். மருத்துவத்தால் சரி செய்ய இயலாத ஒரு பிரச்சினையை, நவீன தொழில்நுட்பம் சரி செய்துவிட்டது” என்கிறார் ஜாக்கி கென்னி. இந்தப் பயம் வந்தவர்களால் தனியாக இருக்க முடியாது. 18 – 35 வயதுக்குள் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

வீட்டுக்குள்ளிருந்தே உலகம் சுற்றி வந்தவர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x