Published : 25 Nov 2014 09:29 AM
Last Updated : 25 Nov 2014 09:29 AM

உலக மசாலா: வெனிஸ் நகரில் ஒலி மாசு

ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரில் வசிக்கிறார் 30 வயது பெத் ஃபால்ட்ஸ். பெத்தின் அப்பாவுக்கு ஷிஸ் மஹால் உணவகத்தில் சாப்பிடுவதென்றால் மிகுந்த விருப்பம். சுமார் 50 ஆண்டுகளாக அங்கே சாப்பிட்டு வருகிறார். ஷிஸ் மஹாலில் இருந்து ஓர் அறிவிப்பு வெளியானது. யாராவது தங்கள் உணவகத்தின் பெயரை டாட்டூவாகக் குத்திக்கொண்டால், இலவசமாக உணவு வழங்குவதாக அறிவித்தது. உடனே உணவகத்தைத் தொடர்புகொண்டு, தான் டாட்டூ குத்திக்கொள்வதாகச் சொன்னார் பெத். இடுப்புப் பகுதியில் உணவகத்தின் பெயரை டாட்டூவாக வரைந்துகொண்டார். பெத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரது அப்பாவுக்கு ஓர் ஆண்டு முழுவதும் இலவச உணவு வழங்குவதாக அறிவித்துள்ளது ஷிஸ் மஹால். மகளை நினைத்துப் பெருமை கொள்கிறார் பெத்தின் அப்பா.

அடேங்கப்பா! ஒரு டாட்டூவுக்கு ஒரு வருஷம் முழுவதும் சாப்பாடா!

நீரால் சூழப்பட்டுள்ள அழகிய நகரம் வெனிஸ். மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் வெனிஸுக்கு ஆண்டுதோறும் 2.7 கோடி மக்கள் வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக வரும் மக்கள் தங்கள் சூட்கேஸ்களை இழுத்துக்கொண்டு செல்லும்போது ஒலி மாசு அதிகரிக்கிறது. இதனால் சக்கரங்கள் இல்லாத சூட்கேஸ்களைப் பயன்படுத்தும்படி வலியுறுத்தப்படுகிறது. மீறி யாராவது சத்தமாக சூட்கேஸ்களை இழுத்துச் சென்றால் சுமார் 38,000 ரூபாய் அபராதமாகச் செலுத்தவேண்டும்.

இங்கே எல்லாம் யாராவது ஒலி மாசு பத்திக் கவலைப்படறாங்களா பாருங்க…

சிலியைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்ட் ஃபிட்னஸ் கம்பெனி மிகப் பெரிய ட்ரட்மில்லை உருவாக்கியிருக்கிறது. சாதாரண ட்ரட்மில்லில் ஒரு நேரத்தில் ஒரே ஒருவர்தான் ஓட முடியும். ஆனால் இந்த ராட்சச ட்ரட்மில்லில் ஒரே நேரத்தில் பத்துப் பேர் ஓடலாம். 16 அடி உயரமும் 19 அடி நீளமும் கொண்ட இந்த ட்ரட்மில் சாதாரண ட்ரட்மில்லை விட நான்கு மடங்குப் பெரியது. 24 மணி நேரம் இந்த ட்ரட்மில்லில் ஓடவைத்து, கின்னஸ் சாதனை படைக்கத் திட்டமிட்டிருக்கிறது ஆக்ஸ்ஃபோர்ட் ஃபிட்னஸ் நிறுவனம்.

தனியா ஓடறதை விட கூட்டத்தோடு ஓடுறது நல்லதுதான்!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு குழந்தையைப் பெட்டிக்குள் அடைத்து வைத்த தந்தைக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. 44 வயதான டேவிட் வைசெகெல், 11 வயது மகனை எட்டுக்கு ஆறு அடி கொண்ட மரப்பெட்டியில் தினமும் அடைத்து வைத்திருக்கிறார். மகனின் மோசமான நடவடிக்கைகளுக்காகத்தான் இந்தத் தண்டனையை அளித்ததாகச் சொல்கிறார் டேவிட். பிராணிகளை வதைக்கிறான், படுக்கைக்குத் தீ வைக்கிறான்… என்று மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றும் பலன் இல்லாததால், பெட்டியில் அடைத்துவிட்டார் டேவிட். பள்ளி, உணவு, கழிப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பெட்டியில் இருந்து வெளிவர மகனை அனுமதித்திருக்கிறார். மீட்கப்பட்ட சிறுவன் தற்போது அம்மாவுடன் வசித்து வருகிறான்.

அடக் கொடுமையே… டேவிட்டைத்தான் மனநல மருத்துவரிடம் அனுப்பணும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x