Last Updated : 06 Nov, 2014 10:37 AM

 

Published : 06 Nov 2014 10:37 AM
Last Updated : 06 Nov 2014 10:37 AM

விரல் சொடுக்கும் வடகொரியா - 3

கொரியப் போர் 1950-ல் தொடங்கி 1953-ல் முடிவுக்கு வந்தது என்று பார்த்தோம். வட கொரியாவின் இன்றைய நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், கொரியப் போருக்கு முன்னால் நடந்த சில நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள வேண்டும். 38வது இணைக்கோடுதான் (அட்ச ரேகை எனலாம்) வட, தென் கொரியாக்களைப் பிரித்தது. யார் இந்தக் கோட்டைத் தீர்மானித்தார்கள்? பார்ப்போம்.

1945 ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரின் மீதும், அதே மாதம் 9 அன்று நாகசாகி நகரின் மீதும் அணுகுண்டு வீசி ஜப்பானுக்குப் பேரழிவை உண்டாக்கியது அமெரிக்கா. இதைத் தொடர்ந்து ஜப்பானியச் சக்ரவர்த்தி ஹிரோஹிடோ தனது தோல்வியை ஒத்துக் கொண்டு சரணடைந்தார். இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது.

ஜப்பான் சரணடைவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்க அதிகாரிகளான டீன் ரஸ்க் என்பவருக்கும் சார்லஸ் போன்ஸ்டீல் என்பவருக்கும் ஒரு வேலையை அமெரிக்கா அளித்திருந்தது. கிழக்காசியாவில் அமெரிக்கா ஆக்ரமித்துள்ள இடங்களைத் தனிமைப்படுத்த வேண்டும்!

மேற்படி இருவரின் பணி கொரியாவிலும் நடந்தேறியது. கொரியாவை கிட்டத்தட்ட இரண்டாகப் பிரித்தார்கள் – 38வது இணைகோட்டினை ஒட்டி. கொரியாவின் தலைநகர் சியோல் தங்கள் பாதியில் வரும்படி ஜாக்கிரதையாகத்தான் பிரித்தார்கள். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. வட கொரியாவில் இருந்த ஜப்பானிய ராணுவம் சோவியத்திடம் சரணடைந்தது. தென் கொரியாவில் இருந்த ஜப்பானிய ராணுவம் அமெரிக்காவிடம் சரணடைந்தது. போதாக்குறைக்கு வட கொரியாவில் சோவியத் ராணுவமும், தென் கொரியாவில் அமெரிக்க ராணுவமும் ஏற்கனவே தங்கள் கால்களைப் பதித்திருந்தன.

பொதுவான ஒரு ட்ரஸ்ட் அமைப்பு உருவாக்கப்பட்டு அது இரு கொரியாக்களும் இணைவதற்கான முயற்சிகளை எடுக்கத் தொடங்கியது. சம பலத்துடன் இருந்த சோவியத்தும் அமெரிக்காவும் இதற்கு சம்மதிக்குமா? முழு கொரியாவுமே சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்துக்குத் திரும்ப வேண்டும். இது அமெரிக்காவின் நிபந்தனை.

ஒட்டு மொத்தமாக கொரியா கம்யூனிஸப் பாதைக்குத் திரும்ப வேண்டும். இது சோவியத்தின் கட்டளை. பிறகு தெளிவாகவே இரு தரப்பும் அறிவித்துவிட்டன – பிரிவினைதான் ஒரே வழி. தன்னைத் தனி நாடாக முதலில் அறிவித்துக் கொண்டது தென் கொரியாதான். இது நடந்தது மே, 1948-ல். சிங்மேன் ரீ என்பவர் இதன் முதல் தலைவரானார்.

ஆக தானாகவே வட கொரியா தனி நாடாக உருவாகிவிட்டது. கிம் இல் சுங் என்பவரை சோவியத் யூனியன் அதற்குத் தலைவராக்கியது. சோவியத் யூனியனின் செம்படையில் பணியாற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1948 செப்டம்பரில் இவர் வட கொரியாவின் அதிபரானார். சிங்மேன் ரீ, கிம் இல் சுங் ஆகிய இருவருமே ஒருவரையொருவர் சீண்டிப் பார்த்தனர். பிரிவினை எல்லைக் கோட்டைத் தாண்டத் தலைப்பட்டனர்.

இதைத் தொடர்ந்துதான் கொரியப் போர். போர் முடிந்த கட்டத்தில் இரண்டு நாடுகளுமே ஒருவிதத்தில் தொடங்கிய இடத்திலேயே நின்றன. பிரிவினைக் கோடு தொடர்ந்தது. அதாவது இரு கொரியாக்களின் எல்லைப் பரப்பும் சிறிதும் மாறவில்லை. இன்றைக்குக் கூட உலகிலேயே மிகவும் பதற்றமான எல்லைக் கோடு எது என்று கேட்டால் பல அரசியல் மூக ஆராய்ச்சியாளர்கள் வட கொரியா-தென் கொரியா எல்லைக்கோட்டைத்தான் குறிப்பிடுவார்கள்.

1953-ல் கொரியப் போர் ஒரு முடிவுக்கு வந்தபோது அமெரிக்கா ‘’இனி போருக்கான ஆயுதங்களை கொரியாவுக்கு அனுப்ப மாட்டேன்’’ என்று ஓர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் 1957-ல் இந்த ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்கா. தென் கொரியாவுக்கு ஆயுதங்களை அனுப்பியது. அதுவும் அணு ஆயுதங்கள்.

வட கொரியா சாமர்த்தியமாகச் செயல்பட்டது. தன் ராணுவத்தை ஒட்டுமொத்தமாக தனது தென் எல்லைக்கு அனுப்பியது. அதாவது அணு ஆயுதம் வீசப்பட்டால் தங்கள் ராணுவம் மட்டுமல்ல, தென் கொரியாவின் ஒரு பகுதியும், அங்கு குவிக்கப்பபட்டிருக்கும் தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவத்தினரும் சேர்ந்தே இறக்கட்டும் என்ற போர் தந்திரம்.

கொரியாவில் தேர்தல் நடக்க வேண்டும். முழுக் கொரியாவுக்கும் ஒரே அரசு அமைய வேண்டும் என்று அறிவித்த ஐ.நா., தேர்தல் சூழலை உண்டுபண்ண தனது பிரதிநிதிகளையும் அனுப்பியது. வட கொரியாவுக்குள் அவர்களை நுழையவே விடவில்லை சோவியத் யூனியன்.

சமர்த்துப் பிள்ளையாக தென் கொரியா தங்களுக்கென்று ஒரு பாராளுமன்றத்தை தேர்தலின் மூலம் தேர்ந்தெடுத்துக் கொண்டது. வடக்கு தெற்கு உறவு தேய்ந்து கொண்டே வந்தது. வட கொரிய ராணுவம் அமைதிப் பகுதியில் (‘நியூட்ரல் ஸோன்’) நுழைந்து தென் கொரிய ராணுவத்தை அவ்வப்போது தாக்கியது.

‘பார்க்’ மீது குண்டு வீசியது (பார்க் என்பது பசுமைப் புல்வெளி அல்ல. தென் கொரியாவை 1961 முதல் ஆண்டு வந்த அப்போதைய ஜனாதிபதியின் பெயர்). ஆனால் அந்தக் கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.

தங்களது கடல் பகுதியில் அமெரிக்கக் கப்பல் ஒன்று காணப்பட, அதை உடனே சிறைப்படுத்தியது வட கொரியா. வேவு பார்க்கவே அந்தக் கப்பல் வந்தது என்று வட கொரியா கூற, அதை மறுத்தது அமெரிக்கா. பிறகு பெரிய மனது பண்ணி கப்பல் பயணிகளை விடுவித்த வட கொரியா கப்பலை மட்டும் தானே வைத்துக் கொண்டது.

நாளடைவில் இரண்டு கொரியாவின் பிரதிநிதிகளும் கலந்து பேசினார்கள். மீண்டும் கொரியா இணைய வழியிருக்கிறதா என்று கூட அலசினார்கள். வாய்ப்பேயில்லை என்றானதும் தனித்தனிப் பெயரில் ஐ.நா.வில் உறுப்பினர் ஆயின வட கொரியாவும், தென் கொரியாவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x