Published : 02 Jul 2017 11:14 AM
Last Updated : 02 Jul 2017 11:14 AM

உலக மசாலா: பலகை படிக்கும் காகங்கள்

‘இந்தப் பகுதிக்குள் நுழைய வேண் டாம்’ என்ற குறியீடுகளை எழுதி வைத்தால், அந்தப் பகுதிக்குள் காகங்கள் நுழைவதில்லை! “3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பரும் காகங்கள் ஆராய்ச்சியாளருமான சுடோமு, காகங்கள் உள்ளே வரவேண்டாம் என்ற குறியீடுகளை எழுதி வைக்கும்படிக் கூறினார். கிண்டல் செய்கிறார் என்று நினைத்தேன். அவரது கட்டாயத்தின் பேரில் எழுதி வைத்தேன். என்ன ஆச்சரியம், அதன் பிறகு காகங்கள் அந்தப் பகுதிக்குள் நுழையவே இல்லை. இந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை பரிசோதித்துப் பார்த்துவிட்டேன்.

குறியீடுகள் வைக்கும் வரை காகங்கள் தொல்லை அதிகமாக இருந்தது. கூடுகளைக் கட்டுவதும் குஞ்சுகளைப் பொரிப்பதுமாக எப்போதும் காகங்களின் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதி இது. இப்போதும் காகங்கள் வருகின்றன, குறியீடு அட்டையைப் பார்த்தவுடன் திரும்பிச் சென்றுவிடுகின்றன. ஜப்பானின் ஓட்சூச்சி நகரில் உள்ள எங்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் சுனாமியால் கதவுகள், ஜன்னல்கள், குழாய்கள் எல்லாம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களில் காகங்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்புச் செய்திருந்தன. ’உள்ளே நுழையாதே’ பலகையைத் தொங்கவிட்டேன்.

அன்றிலிருந்து அந்தப் பகுதிக்குள் எந்தக் காகமும் நுழைவதில்லை” என்கிறார் பேராசிரியர் கட்சுஃபுமி சாட்டோ. “காகங்களுக்குக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவு இருக்கிறதா என்று கேட்கிறார்கள். எங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் எப்பொழுதும் யாராவது காகங்களை, கை நீட்டி விரட்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் கை நீட்டும் இடங்களில் ஏதாவது பலகை தொங்கிக்கொண்டிருக்கும். நாளடைவில் பலகையைக் கண்டாலே அங்கே நுழையக் கூடாது என்று காகங்கள் புரிந்துகொண்டன.

பலகையில் காகங்கள் நுழையலாம் என்று எழுதி வைத்தாலும் அவை எட்டிப் பார்ப்பதில்லை. அதனால் அவற்றுக்குக் குறியீடு புரிகிறது என்று சொல்ல முடியாது. ஆனால் பலகையைப் பார்த்ததும் தங்களுக்கு அபாயம் என்று நினைத்து, அவை நுழைவதில்லை” என்கிறார் ஆராய்ச்சியாளர் சுடோமு டேகேடா.

நாமெல்லாம் குடையை விரித்தே காகங்களை விரட்டிவிடுகிறோம்!



மெக்சிகோவைச் சேர்ந்த அண்டோனியோ கார்சியா தீவிரமான கால்பந்து ரசிகர். உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளைக் காணக் கிளம்பிவிடுவார். அளவுக்கு அதிகமான ஆர்வம் அவரது மனைவிக்குப் பிடிப்பதில்லை. அன்று கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். பல மணி நேரங்களுக்குப் பிறகும் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.

போனிலும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தார். “நான் பலமுறை இப்படிச் சென்றிருக்கிறேன். அதனால் என் மனைவி பதறமாட்டார். ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து போட்டியைக் காணச் செல்கிறேன் என்றால் விடமாட்டார். அதனால் சிகரெட் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அப்படியே ஜெர்மனி சென்று, அங்கிருந்து ரஷ்யா போனேன். போட்டியைப் பார்த்துவிட்டு உடனடி யாகக் கிளம்பிவிட்டேன். என் மனைவிக்கு ஒரு பரிசுப் பொருளை மறக்காமல் வாங்கிவிட்டேன்.

என் வாழ்நாள் சேமிப்புகளை எல்லாம் கால்பந்து போட்டிகளைக் காணவே செலவு செய்கிறேன் என்று புரிகிறது. ஆனால் அந்த சந்தோஷத்துக்கு இணை வேறு எதுவும் இல்லை. பணத்தைச் சம்பாதித்துவிடலாம். இப்படிப்பட்ட சந்தோஷங் களை இழந்துவிடக்கூடாது” என்கிறார் அண்டோனியோ கார்சியா.

இப்படியும் ஒரு ரசிகர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x