Published : 22 Nov 2014 11:32 AM
Last Updated : 22 Nov 2014 11:32 AM

உலக மசாலா: மாற்றம் தவிர்க்க முடியாதது!

ரஷ்யாவைச் சேர்ந்த 26 வயது ஜென்யா பொலோடோவ் பெரிய முயற்சிகளுக்குப் பிறகு, தன்னுடைய லட்சியத்தை அடைந்துவிட்டார். அதாவது பிளாட்டிபஸ் போல தன் முகத்தை மாற்றிக்கொண்டார். முகத்தில் உள்ள காது, உதடு, மூக்கு போன்ற எட்டுப் பகுதிகளை மாற்றி, பிளாட்டிபஸ் முகத்தைப் பெற்றிருக்கிறார். ‘உருவத்தை மாற்றும் எண்ணம் பத்து வயதிலேயே உருவாகிவிட்டது. பிளாட்டிபஸ் என்றால் எனக்கு விருப்பம் அதிகம். அதன் தட்டையான அலகு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் சில பல வேலைகள் செய்து, உதடுகளை முதலில் மாற்றிக்கொண்டேன். பிறகு படிப்படியாக மற்ற உறுப்புகளையும் மாற்றி, முழுமையான பிளாட்டிபஸ் மனிதனாக மாறிவிட்டேன். என் லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைக்கிறேன்’ என்கிறார் ஜென்யா.

ஐயோ… இப்படியெல்லாம் கூட ஆசை வருமா?

துபாயில் எடை குறைப்புக்கான போட்டி துபாய் நகராட்சியால் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கிலோ எடை குறைப்புக்கும் 2 கிராம் தங்கம் வழங்கப்படும் என்ற போட்டி அறிவிப்பைக் கேட்டதும் 28 ஆயிரம் குடும்பங்கள் தங்களைப் பதிவு செய்துகொண்டன. அதிக எடை கொண்ட கணவன், மனைவியோடு 14 வயதுக்குக் கீழே உள்ள இரண்டு குழந்தைகள் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். போட்டியாளர்களை அழைத்து எடை குறைப்புக்கான மருத்துவ அலோசனைகளை அளிக்கிறார்கள். மூன்று மாதங்களில் எவ்வளவு எடைகளைக் குறைத்துக் காட்டுகிறீர்களோ, அவ்வளவு தங்கம் பரிசு. 28 வயது அரிஃபின் பாபு 91 கிலோ எடையிலிருந்து 20 கிலோவைக் குறைத்திருக்கிறார். போட்டியில் கலந்துகொண்டு கணிசமாக எடை குறைத்த 7,500 பேருக்கு டிசம்பர் மாதம் நடைபெறும் விழாவில் தங்கம் அளிக்கப்பட இருக்கிறது. அதிக எடையால் பல்வேறு நோய்கள் உண்டாவதால், பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் துபாய் நகராட்சி இந்தப் போட்டியை நடத்தி வருகிறது. இதற்காக 40 கிலோ தங்கம் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.

அடடா! இந்தப் போட்டியெல்லாம் நம்ம ஊர்ல நடத்த மாட்டேங்கிறாங்களே…

உக்ரைனில் வசிக்கும் 55 வயது ஸ்லாவிக் விதவிதமான நவீன ஆடைகளை அணிந்து கலக்குகிறார். வீடோ, பெரிய வருமானமோ இல்லாத ஸ்லாவிக், அந்தந்தக் காலகட்டங்களில் வரும் ஃபேஷன் உடைகளை அணிந்துகொள்வது எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறது. ஏழைகளுக்கு உதவி அளிக்கும் அமைப்புகளிடமிருந்து ஆடைகளைப் பெற்றுக்கொள்கிறார். நிரந்தரமாக ஒரே இடத்தில் தங்குவதும் இல்லை. அவருக்கென்று பொருள்களும் ஏதுமில்லை. ஸ்லாவிக் பற்றிக் கேள்விப்பட்ட உலகப் புகழ்பெற்ற உக்ரைன் புகைப்படக்காரர், அவரை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளியிருக்கிறார். ஒரு டாலர் மட்டும் பெற்றுக்கொண்டு, ஸ்லாவிக் போஸ் கொடுத்து வருகிறார்.

வித்தியாச மனிதர்!

பார்பி பொம்மைகள் சரியான அளவுகளில் வடிவமைக்கப்படவில்லை என்று சொல்லும் பிட்ஸ்பர்க்கைச் சேர்ந்த நிக்கோலே லாம், புதிய பொம்மையை வடிவமைத்திருக்கிறார். லாம்மிலி என்று பெயரிட ப்பட்டுள்ள இந்தப் பொம்மை, 19 வயது பெண்ணின் உடல் அளவுகளை ஒத்திருக்கிறது. மார்ச் மாதம் இந்தப் பொம்மை அறிமுகப்படுத் தப்பட்ட உடனே, உலகம் முழுவதிலுமிருந்து 25 ஆயிரம் பொம்மை களுக்கான ஆர்டர்கள் குவிந்தன. இந்தப் பொம்மையின் கைகளும் கால்களும் மடக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், விதவித மாக பொம்மையை மாற்றிக்கொள்ளலாம். இந்தப் பொம்மைக்கு டாட்டூ போட்டுக்கொள்ளலாம், கண்ணாடி அணிவித்துக்கொள்ளலாம். பார்பி பிரியர்கள் லாம்மிலி நோக்கித் திரும்பியிருக்கிறார்கள்.

மாற்றம் தவிர்க்க முடியாதது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x