Published : 13 Aug 2016 10:25 AM
Last Updated : 13 Aug 2016 10:25 AM

உலக மசாலா: பெண் குங்ஃபு துறவிகள்!

நேபாளில் உள்ள ட்ரக் அமிதபா மலையில் வசிக்கும் பெண் புத்தத் துறவிகள் குங்ஃபு கற்று வருகிறார்கள். உலகிலேயே முதல்முறையாக குங்ஃபு கற்ற பெண் துறவிகள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார்கள். பொதுவாக புத்த மடங்களில் பெண் துறவிகளுக்கு வீட்டு வேலைகள்தான் கொடுக்கப்படும். ஆண் துறவிகளின் பிரார்த்தனைகளுக்கு வேண்டிய விஷயங்களைச் செய்ய வேண்டும். சமையலறையிலும் தோட்டங்களிலும்தான் பெரும்பாலான நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். ஆண் துறவிகளை விட பெண் துறவிகள் தாழ்வாகவே நடத்தப்பட்டு வந்தனர்.

800 வருடங்கள் பழமையான ட்ரக்பா மடத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பு கியால்வாங் ட்ரக்பா பொறுப்புக்கு வந்தார். அவர் ஆண்களுக்கு இணையான அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். ‘‘நான் சிறுவனாக இருந்தபோதே பெண் துறவிகள் குறித்து நிறைய யோசித்தேன். துறவியிலும் ஆண், பெண் பாகுபாடு இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆண் துறவிகளுக்கு வழங்கப்படும் கல்வி, ஆன்மிகப் பயிற்சி போன்றவற்றைப் பெண்களுக்கும் வழங்க நினைத்தேன். நான் பொறுப்புக்கு வந்தபோதுதான் அவற்றைச் செய்ய முடிந்தது.

பெண் துறவிகளும் ஆண் துறவிகள் கற்றுக்கொள்ளும் கல்வி, தியானம், ஆங்கிலம், மேலாண்மை கலை போன்ற அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். 8 ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமைச் சேர்ந்த பெண் துறவிகள் கொரில்லா போர்ப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டதைப் பார்த்தேன். அதற்குப் பிறகுதான் இந்த மடத்தில் குங்ஃபு பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தோம். தினமும் 2 மணி நேரம் பயிற்சிகள்’’ என்கிறார் கியால்வாங் ட்ரக்பா. ‘‘குங்ஃபு பயிற்சி துறவிகளுக்கு எதற்கு என்று நினைக்கிறார்கள். அது தவறு. குங்ஃபு ஆரோக்கியத்தைக் காக்கிறது. தியானத்தை எளிமையாக்கி இருக்கிறது.

உடலுக்குச் சிறந்த பயிற்சியாக உள்ளது. ஒழுக்கத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தியிருக்கிறது. தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. மிக முக்கியமாக ஆண்களிடம் இருந்து எங்களைப் பாதுகாக்கிறது. குங்ஃபு பெண் துறவிகள் என்றாலே ஆண்கள் அருகில் வரக்கூட நினைக்க மாட்டார்கள்’’ என்கிறார் 16 வயது ரூபா லாமா. ‘‘நேபாள பெண்கள் கனவில் எதிர்பார்க்காத விஷயங்களை எல்லாம் துறவிகளான எங்களால் செய்ய முடிகிறது! மடத்தில் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். டென்னிஸ், ஸ்கேட்டிங், ஆங்கிலம், திபெத்திய மொழி, நடனம், இசை என்று ஏராளமானவற்றை அறிந்திருக்கிறோம்’’ என்கிறார் 18 வயது ஜிக்மே கோன்சோக் லாமோ. ‘‘நான் பெரிய தலைவரும் இல்லை, ஆசிரியரும் இல்லை. ஆனால் பாலினச் சமத்துவம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அது சாத்தியமாகியிருக்கிறது’’ என்கிறார் கியால்வாங் ட்ரக்பா.

சமத்துவத்தை நிலைநாட்டும் பெண் குங்ஃபு துறவிகள்!

சீனாவின் சாங்ஷா நகரில் ஒருவர் தன்னுடைய சைக்கிளை, மரத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தார். ஸ்கூட்டரில் வந்த ஒரு மனிதர், சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, மரத்தை ரம்பத்தால் வெட்டினார். சில நிமிடங்களில் மரம் கீழே சாய்ந்தது. சைக்கிளை எடுத்து ஸ்கூட்டரில் வைத்துக்கொண்டு, வேகமாகச் சென்றுவிட்டார். அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பதிவாகியிருந்த காட்சிகள், வெளியில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடப்பாவி…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x