Last Updated : 28 Oct, 2013 03:36 PM

 

Published : 28 Oct 2013 03:36 PM
Last Updated : 28 Oct 2013 03:36 PM

அமெரிக்க ரெக்கார்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட்

அதிர்ச்சியில் வாயடைத்திருக்கிறது ஜெர்மனி. தேசத்தின் அதி முக்கியஸ்தரான சான்சிலரம்மா ஏஞ்சலா மெர்க்கெலின் மொபைல் போன் அழைப்புகளை கிபி 2002-லிருந்து அமெரிக்க உளவாளிகள் ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள். 2002-ல் ஏஞ்சலா சான்சிலராகக்கூட இல்லை. அவர் பதவிக்கு வந்தது 2005ல்தான். ஆனாலுமென்ன? நாளைய நட்சத்திரத்தை இன்றிலிருந்தே கவனிப்போம்.

ஜெர்மனியின் சான்சிலர் பதவி நம்மூரில் பிரதம மந்திரி பதவிக்குச் சமானம். யாராயிருந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை, வெட்கமில்லை, இதைச் செய்வதில் அவமானமும் இல்லை என்று ஆத்ம சுத்தியுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தத் திருப்பணியைச் செய்து வந்திருக்கிறது.

இதில் உச்சமென்னவென்றால் கடந்த ஜூன் மாதம் நல்லுறவும் இன்னபிறவும் வளர்ப்பதன் பொருட்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஜெர்மனிக்குச் சென்று ஏஞ்சலாவைச் சந்தித்து ரொம்ப நேரம் பேசிவிட்டு வேறு வந்திருக்கிறார். பத்தரை மாற்று உத்தமர் அப்போது உலகளாவிய தீவிரவாத ஒழிப்பில் அமெரிக்காவுக்கு ஜெர்மனி தோள்கொடுக்க வேண்டும், அது, இதுவென்று ஏகத்துக்கு உருகி, உள்ளூரில் நல்லபேர் வாங்கிக்கொண்டு தன்னூர் போய்ச் சேர்ந்தார்.

இப்போது கேட்கலாம். அமெரிக்காவின் இந்தத் திருப்பணியைக் காட்டிலும் ஒரு பயங்கரவாதம் உண்டா! இன்னொரு கேவலத்தையும் கையோடு தெரிந்துகொண்டுவிட வேண்டும். ஜெர்மன் மீடியாவில் மேற்படி விவகாரம் வெடித்த சூட்டில் பாரக் ஒபாமா பதறிக்கொண்டு ஏஞ்சலாவுக்கு ஒரு பதில் சொல்லியிருக்கிறார். அம்மணி, எனக்கு இந்த விவகாரம் சுத்தமாகத் தெரியாது. தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே தடுத்திருப்பேன்.

யார் சொல்வது? அமெரிக்க அதிபர். தனது உளவு நிறுவனப் பிரகஸ்பதிகள் என்ன செய்கிறார்கள் என்று தனக்குத் தெரியாது என்று அமெரிக்க அதிபர் சொல்கிறாரென்றால் அவருக்கும் பாகிஸ்தான் அதிபருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அர்த்தம். அவர்கள்தான் ஐ.எஸ்.ஐயின் நடவடிக்கைகளுக்கும் தமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பிரதி சுக்லபட்சம் ஓர் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள்.

பாரிசிலிருந்து வெளிவரும் 'ல மாண்டே' மாலை பேப்பரில் இந்த ஒட்டுக்கேட்பு விவகாரங்கள் ஆதாரத்துடன் வெளிவரத் தொடங்கியதிலிருந்தே பல உலக நாடுகளின் தலைவர்கள் உதறிக்கொண்டு கிடக்கிறார்கள். ஏஞ்சலினாவுக்கு பாரக் ஒபாமா சமாதானம் சொன்னதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் இதே விவகாரத்துக்காக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரிடமும் சமாதானம் பேசி வருத்தம் தெரிவித்தார்.

செய்கிற தவறைச் செய்துகொண்டே இருப்போம்; நெருக்கடி வந்தால் வருத்தம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போச்சு என்பது அமெரிக்கக் கண்டுபிடிப்புகளுள் தலையாயது. இதுநாள்வரை தன் சந்தேக லிஸ்டில் உள்ள தேசங்களில் மட்டும்தான் அமெரிக்கா இம்மாதிரியான செப்டிக் டேங்க் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்ததாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். இல்லை; எனக்கு நண்பன், விரோதி என்ற பேதமில்லை என்று இதன்மூலம் தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டிவிட்டார்கள். விவகாரம் வெடித்திருப்பது ஒரு மானக்கேடு என்று கூட நினைக்க யாரும் தயாரில்லை. என்ன வேண்டும் உங்களுக்கு? இனி உளவு பார்க்கமாட்டேன் என்று ஒப்பந்தம் போடவேண்டுமா? வரைவு ரெடி பண்ணுங்கள். கைநாட்டு வைக்கிறேன். அப்புறம்? நல்லுறவைப் புதுப்பிக்க வேறேதாவது செய்ய வேண்டுமா? சரி, செய்துவிடலாம். வேறென்ன?

இதுகாறும் 19 நாடுகள் அமெரிக்காவின் இந்த உளவு லீலைகளால் பாதிக்கப்பட்டு குற்றம் சாட்டியிருக்கின்றன. பத்தாத குறைக்கு அமெரிக்க மக்களும் துணை நாயனம் வாசிக்கிறார்கள். உள்ளூரிலும் ஒட்டுக்கேட்பு வைபவத்துக்குக் குறைச்சல் இல்லையாம்.

சந்தேகம் ஒரு வியாதி. சொந்த நாட்டு மக்களானாலும் சரி, மற்ற நாட்டு அதிகாரிகளானாலும் சரி, யாராக இருந்தாலும் சந்தேகப்பட்டுக்கொண்டேதான் இருப்பேன் என்பது மாபெரும் மனோ வியாதி. ஒரு வியாதி பிடித்த வல்லரசின் கோரப்பிடியில் சிக்கிக் கிடக்கிறது உலகம்.

இந்த இம்சை ஒழியவேண்டுமானால் ஒரே வழிதான் உண்டு. பாதிக்கப்பட்டோர், படாதோர் பேதமின்றி உலக நாடுகள் ஒன்று மிச்சமில்லாமல் ஒன்று சேர்ந்து அமெரிக்காவை எதிர்த்து நிற்கவேண்டும். கார்னர் செய்து சட்டையைப் பிடித்து உலுக்கவேண்டும். அல்லாத பட்சத்தில் ஆயுசுக்கும் இந்த அசிங்கம் தொடரத்தான் செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x