Last Updated : 02 Jun, 2016 02:54 PM

 

Published : 02 Jun 2016 02:54 PM
Last Updated : 02 Jun 2016 02:54 PM

அனைத்து வகை புற்றுநோய்களை எதிர்க்கும் புதிய சிகிச்சை முறை: ஜெர்மனி ஆய்வாளர்கள் சோதனை

அனைத்து வகையான புற்றுநோய்களையும் எதிர்த்து அழிக்கும்ஆர்.என்.ஏ. (RNA) வாக்சைன் என்ற புதிய நோய் எதிர்ப்பு சக்தியை ஜெர்மன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இந்த ஆய்வு அதன் முதற்கட்ட நிலையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

அதாவது, வைரஸ் போன்று செயல்படும் ‘மாறாட்ட வைரஸ்களை’ உடலுக்குள் செலுத்தி புற்றுநோய் கட்டிகளுக்கு எதிரான ஒரு தாக்குதல் தடுப்பு உத்தியை உடலே வினையாற்றுமாறு செய்யப்படும் புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.

3 பேரிடம் மட்டுமே சோதனை செய்யப்பட்ட இந்தப் புதிய சிகிச்சை முறை, நோய் எதிர்ப்புச் சக்தித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக நோக்கப்படுகிறது. அதாவது, உடலில் இயல்பாக உள்ள நோய் எதிர்ப்புச் சக்திக் கூறுகளை ஒன்று திரட்டி புற்றுநோய்க்கு எதிரான ஒரு ராணுவமாக படையெடுப்பு செய்ய இந்த புதிய சிகிச்சை முயற்சி செய்வதாக ‘நேச்சர்’ இதழில் வெளியான இந்த ஆய்வு பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாறாட்ட வைரஸ்களை ‘ட்ரோஜான் குதிரை” என்று இந்த ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். அதாவது கேன்சர் ஆர்.என்.ஏ. அடங்கிய நேனோதுகள்களாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கொழுப்பு அமில சவ்வினால் மூடி அடைக்கப்பட்டுள்ளதாகும். அதாவது ஒருவகையான மரபணு சமிக்ஞையாக்கமே இது (genetic coding).’’

இந்த ட்ரோஜான் ஹார்ஸ் என்ற நேனோ துகள்கள் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்படும், இதனால் பெரிய அளவில் வைரஸ் படையெடுப்பு தூண்டப்படும், இந்த வைரஸ் படையெடுப்பு சிறப்பு வாய்ந்த உடல் நோய் தடுப்பு செல்களுக்குள் ஊடுருவும்.

புறச்சூழலுடன் தொடர்புடைய திசுக்களில் காணப்படும் செல்கள் Dendritic cells என்று அழைக்கப்படுகின்றன. இந்த செல்கள் உட்செலுத்தப்பட்ட நேனோதுகள்களில் உட்பொதிவாகக் அடங்கியுள்ள ஆர்.என்.ஏ.-வின் உட்கூறுகளை தீவிரமாக ஆராயும் இந்த நடைமுறையில் புற்று நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும்.

இந்த புதிய நோய் எதிர்ப்புச் சக்தி புற்றுநோயை எதிர்த்துத் தாக்கும் டி-செல்களை செயலூக்கம் பெறச் செய்யும். இதனடிப்படையில் புற்று நோய்க் கட்டிகளுக்கு எதிரான ஒரு பெரிய தாக்குதல் தடுப்புச் சக்தியை உடலுக்குள் உற்பத்தி செய்து விடும்.

முதலில் எலிகளில் இதனை பரிசோதனை செய்த ஆய்வாளர்கள் தோல் புற்றுநோய் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை குறைந்த அளவு மருந்தின் மூலம் மேற்கொண்டனர். இதில் ஆச்சரியப்படத் தக்க வகையில் மூவரிடத்திலும் வலுவான நோய்தடுப்பு செயல்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

மேலும் பல சோதனைகளை மேற்கொண்டு இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றால், அனைத்து வகையான புற்றுநோய்களையும் எதிர்த்து அழிக்கும் ‘உலகளாவிய’ பொது சிகிச்சை முறை வளர்ச்சி பெறும் என்று இந்த ஆய்வு நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சில புற்றுநோய் வகைகளுக்கு நோய் தடுப்பு சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டு வந்தாலும் எவ்வகை கேன்சருக்குமான ‘உலகளாவிய’ பொது சிகிச்சை என்பத் இந்த ஆய்வின் மூலமே தற்போது முதற்கட்ட நிலையில் கைகூடியுள்ளது.

வைரஸ்கள், பாக்டீரியாக்கள், காளான்கள் ஆகியவற்றை மருந்துகள் மூலம் விரட்டியடிக்கலாம். ஆனல் கேன்சர் செல்கள் என்பது நம் உடலுக்குள்ளேயே டி.என்.ஏ சேதமடையும் போது செல்களின் நடத்தை திட்டமிட்டப்படி இல்லாமல் போவதால் ஏற்படுவது.

இதனால்தான் உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு/தடுப்புச் சக்திகளின் தொந்தரவு இல்லாமல் கேன்சர் செல்கள் உடல் முழுதும் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், நோய்க்கூறு செல்களை மட்டும் அழித்து ஆரோக்கியமான செல்களை பாதுகாக்கும் சிகிச்சை முறைகள் மிகவும் கடினம்.

கீமோதெரபி என்று கேன்சருக்கு வழங்கப்படும் பொதுவான சிகிச்சை முறையில் நடப்பது இதுதான். வேகமாகப் பிரியும் செல்களை கீமோதெரபி இலக்கு வைக்கிறது. இதில் நல்ல செல்கள், கெட்ட செல்கள் இரண்டுமே குறிவைக்கப்படுகிறது. ஆனால் நோய்த்தடுப்பு சிகிச்சை முறை என்பதோ நல்ல செல்களை பாதுகாத்து கெட்ட செல்களை மட்டும் அழிப்பதாக இருக்க வேண்டும்.

இந்தப் புதிய ஆய்வு குறித்து லண்டன் கேன்சர் ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஆலன் மெல்சர் கூறும்போது, "இந்த புதிய ஆய்வு சுவாரசியமாக உள்ளது. ஆனால் இன்னும் இந்த ஆய்வு நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. நேனோதுகள்களை உற்பத்தி செய்வது என்பது ஒரு பெரிய சவால்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x