Last Updated : 01 Jun, 2016 11:00 AM

 

Published : 01 Jun 2016 11:00 AM
Last Updated : 01 Jun 2016 11:00 AM

செம்மை காணுமா செர்பியா? - 13

கடந்த 1992-லிருந்து 1995 வரை நடைபெற்றது போஸ்னிய யுத்தம். இதில் செர்பியா முக்கிய பங்குவகித்தது என்பதால் போஸ்னியா குறித்த விளக்கங் களும் செர்பியா குறித்த விளக்கங்களும் இந்தத் தொடரில் அவசியமாகின்றன.

சரித்திரத்தால் மிகவும் வஞ்சிக்கப்பட்ட நாடு போஸ்னியாதான் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். ஆரம்பத்திலிருந்தே பல அரசியல் மாற்றங்களால் அலைக் கழிக்கப்பட்டு ரத்தத்தில் தோய்ந்தபடியே தொடர்ந்தது.

போஸ்னிய யுத்தத்தின்போது அதன் தலைநகரான சரயேவோவில் கூட எந்த வீட்டிலும் மின் விநியோகம் கிடையாது. உணவுப் பொருள்கள் எல்லாம் யானை விலை. ஒரே ஒரு காரட்டின் (தங்கம் அல்ல...காய்) விலை மூன்று டாலர்கள். வீடுகளில் தண்ணீர் விநியோகம் கிடையாது.

போஸ்னியாவில் உள்ள மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முஸ்லிம்கள் (இவர்களில் பலர்

‘ஸ்லாவ்’ என்ற பழைய இனத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறியவர்கள்), கிரேக்கப் பழமையினமான

‘செர்பு’கள், ‘க்ரோட்’டுகள் என்று அழைக்கப்படும் ரோமன் கத்தோலிக் கர்கள்.

ரோமப் பேரரசு, அதன்பிறகு அட்டோமன் துருக்கியர்கள் ஆட்சி என்று அடிமை வாழ்வு அனுபவித்தது போஸ்னியா. ஐரோப்பியத் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய பெர்லின் மாநாட்டின்போதுதான் ஆஸ்திரியா - ஹங்கேரி வசம் போஸ்னியாவை ஒப்படைக்க, 1908-ல் ஆஸ்திரியா - ஹங்கேரி நாடுகள் போஸ்னியாவை அதிகாரப் பூர்வமாக சுவீகரித்துக் கொண்டன. என்றாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் அவை போஸ்னியாவை நடத்தி வந்தன.

நாளடைவில் முதலாம் உலகப் போர் நடைபெற்றதையும் பின்னர் டிட்டோ வின் ஆட்சியில் போஸ்னியா, யுகோஸ்லாவி யாவின் ஒரு பகுதியானதையும் இத் தொடரில் நாம் கண்டோம்.

டிட்டோவின் இறப்புக்குப் பிறகு க்ரோவேஷியாவும் ஸ்லோவேனியாவும் தங்களைச் சுதந்திர நாடுகளாக அறிவித்துக் கொண்டன. ஆனால் போஸ்னியா சுதந்திர மான தனி நாடாக மாறுவதை அந்த நாட்டில் வசித்த செர்புகள் ஒப்புக் கொள்ளவில்லை. செர்பியாவோடு சேர்ந்தே இருந்தால்தான் போஸ்னியாவில் உள்ள தங்களுக்குப் பாதுகாப்பு என்பது அவர்கள் எண்ணம். ஆனால் முஸ்லிம்கள் மற்றும் க்ரோட் இனத்தவரின் மெஜாரிட்டி வாக்குகளைப் பெற்று போஸ்னியா தனி நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. உள்நாட்டுக் கலவரம் உச்சத்தை அடைந்தது.

போஸ்னியாவில் மிகப்பெரிய அளவில் இனக்கலவரம் உண்டானது. இதற்கு அதன் மக்கள் தொகையில் பல்வேறு இனத்தவரின் எண்ணிக்கையும் அவர்களுக்கிடையே நிலவிய வெறுப்புணர்வும்தான் காரணம்.

மொத்த மக்கள் தொகையில் சுமார் நாற்பது சதவீதம் பேர் முஸ்லிம்கள். முப்பத்திரெண்டு சதவீதம் பேர் செர்புகள். பதினெட்டு சதவீதம் பேர் க்ரோட்டுகள்.

மெஜாரிட்டியாக இல்லையென்றாலும் செர்பு பிரிவினர் வலுவாக இருந்தார்கள். கொரில்லா போர்முறை தெரிந்திருந்தது மட்டுமல்ல, செர்பியா இவர்களுக்கு ஆயுத விநியோகம் செய்துவந்தது.

‘தனி நாடு’ அறிவிப்பு வந்ததும் 1992-ல் வெடித்த உள்நாட்டுக் கலவரத்தில் போஸ்னியாவில் ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிக்கப்பட்டன. நாளாக ஆக கலவரம் பெரிதானது. “முஸ்லிம்களை போஸ்னியாவிலிருந்து வெளியேற்றுவதே எங்கள் நோக்கம்” என்று சபதம் செய்தனர் செர்பு இன மக்கள். “எத்னிக் க்ளென்சிங்” என்று வர்ணிக்கப்படும் இந்த

‘இனரீதியில் பரிசுத்தப்படுத்தும்’ அழிக்கும் வேலை வெறித்தனமாக விரிவுபடுத்தப்பட்டது. இரண்டே மாதங்களில் போஸ்னியாவில் மூன்றில் இரு பகுதியை பலத்தை உபயோ கித்து ஆக்கிரமித்துவிட்டனர் செர்புகள்.

செர்புகளின் முஸ்லிம் அழிப்பு சபதம் ஒரு பக்கம் நடக்க, க்ரோட்டுகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இன்னொரு அடிதடி தொடங்கியது.

ஐ.நா.சபை முன்வைத்த எந்த அமைதி திட்டத்தையும் செர்புகள் ஏற்றுக் கொள்ள வில்லை. அரை மனதோடு ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளையும் கையெழுத்திட்ட சில நாட்களிலேயே மீறினார்கள்.

இத்தனை குழப்பங்கள் ஒரு நாட்டில் நடக்கும்போது

‘உலக ரட்சகன்’ அமெரிக்கா சும்மா இருக்குமா? தலையிட்டது. சம்பந்தப்பட்ட தலைவர்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.

அமெரிக்காவிலுள்ள டேடன் என்ற இடத்தில் இந்த சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. போஸ்னியாவின் தலைவரான அலிஜா இதற்கு அழைக்கப்பட்டார். அதே சமயம் போஸ்னியாவில் உள்ள க்ரோட் மற்றும் செர்ப் இனப்பிரிவுகளின் தலைவர்களை அமெரிக்கா அழைக்கவில்லை. இவர்களை ஆட்டுவிப்பது முறையே க்ரோவேஷியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகள்தான். எனவே க்ரோவேஷிய நாட்டு அதிபர் டுட்ஜ்மென் மற்றும் செர்பிய நாட்டு அதிபர் மிலோசெவிக் ஆகியோரைத்தான் சமாதானம் பேச அழைத்தது.

பேச்சு வார்த்தைகளின் முடிவில் “செர்பு களுக்கு 49 சதவீதம், மற்றவர்களுக்கு 51 சதவீதம் என்ற வகையில் போஸ்னியாவைப் பங்கு போட்டுவிடலாம். அவரவர் பகுதிகளில் அவரவர் தங்கியிருக்கட்டும். தனித்தனி குடியரசுகளாக - ஆனால் ஒரே நாடாக - போஸ்னியா இருக்கும்” என்ற ஏற்பாட்டுக்கு எல்லா தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

51 சதவீதத்துக்கு கொஞ்சம் குறைவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தொடக்கத்தில் செர்பு பிரிவினர் முறுக்கிக் கொண்டனர். என்றாலும் உலக நாடுகளின் தீவிரமான கருத்துகளும் அதனால் வலுவடைந்த போஸ்னிய முஸ்லிம்களின் நிலையும் அவர்களை மாற்றிக் கொள்ள வைத்தது.

ஆனால் பிரச்சினை தீர்ந்துவிடவில்லை. அது வேறு புதிய வடிவத்தில் தலைகாட்டியது. எந்தப் பகுதியை யார் எடுத்துக் கொள்வது என்பதில்தான் இடியாப்பச் சிக்கல்! சரயேவோ இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதி தங்களுடையதாக வேண்டும் என்றார்கள் செர்புகள். முஸ்லிம்களோ அது அப்படியே முழுமையாகத் தங்களுக்குத் தேவை என்றனர். செர்பிய நாடு மற்றும் போஸ்னியாவில் உள்ள செர்புகள் வாழும் பகுதி ஆகிய இரு பரப்புகளை இணைக்கும்

‘போஸ்னியா காரிடார்’ என்ற நிலப்பகுதி யாருக்கு என்பதில் நிறைய வெப்ப விவாதங்கள்.

தொடர்ந்தன கலவரங்கள்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x