Last Updated : 28 Nov, 2014 09:50 AM

 

Published : 28 Nov 2014 09:50 AM
Last Updated : 28 Nov 2014 09:50 AM

நடுக்கடலில் தவித்த 700 அகதிகள் மீட்பு

சரக்கு கப்பலில் ஏற்பட்ட கோளாறால் நடுக்கடலில் தவித்த சுமார் 700 அகதிகளை கிரீஸ் கடற்படை மீட்டுள்ளது.

77 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பல் கிரீஸ் நாட்டின் லெராபெட்ரா கடல் பகுதியில் தத்தளிப்பதை அந்த நாட்டு கடற்படையினர் கண்டுபிடித்தனர். அந்த கப்பலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 700 பேர் இருந்தனர்.

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மற்றும் இராக்கைச் சேர்ந்த அவர்கள் ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக குடியேறுவதற்காக சரக்கு கப்பலில் வந்துள்ளனர். அவர்கள் வந்த கப்பலின் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டு நடுக்கடலில் நின்றுவிட்டது.

இந்தக் கப்பலை கிரீஸ் கடற்படையினர் கண்டுபிடித்து இழுவை கப்பல் மூலம் கரைக்கு இழுத்துவந்தனர். அகதிகள் தங்குவதற்காக லெராபெட்ராவில் உள்ள கூடைப்பந்து விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கப்பலில் இருந்த கர்ப்பிணி ஒருவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் நலமாக உள்ளனர் என்று கிரீஸ் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து லெராபெட்டா மேயர் தியோடஸ் கூறியபோது, அகதிகளுக்கு தேவையான உதவிகளை நாங்கள் வழங்குவோம். அவர்களை சில நாள்களுக்கு விருந்தினர்களாக மட்டுமே உபசரிக்க முடியும். இங்கேயே நிரந்தரமாக தங்க அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.

உள்நாட்டு குழப்பம் நிலவி வரும் சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். சிறிய ரக கப்பலில் வரும் அவர்கள் அடிக்கடி பல்வேறு விபத்துகளிலும் சிக்குகின்றனர். அந்த வகையில் கடந்த ஓராண்டில் மட்டும் 2500 அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x