Last Updated : 15 Jun, 2017 08:06 AM

 

Published : 15 Jun 2017 08:06 AM
Last Updated : 15 Jun 2017 08:06 AM

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 120 வீடுகள் சேதம், 6 பேர் பலி

120 வீடுகள் சேதம் | 6 பேர் பலி, 20 பேர் கவலைக்கிடம், 70 பேர் காயம் | தீயை கட்டுப்படுத்திய 40 வாகனங்கள்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 தளங்களைக் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற் பட்டது. இதில் 6 பேர் பலியாயினர்.

மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மீட்புப் பணி தொடர்ந்து நடை பெறுகிறது.

மேற்கு லண்டனில் வடக்கு கென்சிங்டன் பகுதியில் ‘கிரென் ஃபெல் டவர்’ அடுக்குமாடி குடி யிருப்பு உள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டி டத்தில் உள்ள 120 வீடுகளில் சுமார் 600 பேர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று அதி காலை 1.16 மணியளவில் 2-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுமார் 40 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. இந்த வாகனங்கள் மூலம் 250 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தவிர கட்டிடத்துக்குள் சிக்கியவர் களை உயிருடன் மீட்கும் பணி யிலும் வீரர்கள் ஈடுபட்டனர். இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுடன் மீட்டு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இதில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் தூங்கிக் கொண் டிருந்த பலர் கட்டிடத்துக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என ஜன்னல் வழியாக உதவி கோரி குரல் எழுப்பினர். சிலர் ஜன்னல் வழி யாக கீழே குதித்ததாகவும் கூறப் படுகிறது. எனினும், பலர் தீ விபத்தை உணர்ந்ததும் கட்டிடத்திலிருந்து உடனடியாக வெளியேறி விட்டனர். அவர்கள் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு புகை மண்டலமாக காட்சி அளித்தது. கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை சாம்பல் படிந்து காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவ திக்குள்ளாகி உள்ளனர். இதனால் இந்த கட்டிடத்தைச் சுற்றி உள்ள பகுதியில் வசிப்பவர்கள் உடனடி யாக அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டனர்.

மேல் தளத்துக்கு செல்ல சிக்கல்

இதுகுறித்து லண்டன் மாநகர தீயணைப்புத் துறை தலைவர் டேனி காட்டன் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இது மிகவும் மோசமான விபத்து. என்னுடைய 29 ஆண்டுகால பணி யின்போது இதுபோன்ற பயங்கர விபத்தை ஒருபோதும் பார்த்ததே இல்லை. இதற்கான காரணம் தெரிய வில்லை. வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை கட்டிடம் உறுதியாக இருப்பதாக அவர்கள் தெரிவித் தனர். தீ பயங்கர மாக இருந்ததால் வீரர்களால் 20-வது தளத்துக்கு மேல் போக முடியவில்லை. இதனால் அதற்கு மேல் தளங்களில் வசித்து வந்தவர் கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை” என்றார்.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமாண்டர் ஸ்டூவர்ட் கன்டி கூறும் போது, “இந்த விபத்தில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்றார்.

கட்டிடம் கடந்த ஆண்டுதான் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் கட்டிடத்தில் தீ பாதுகாப்பு அம்சங்கள் முறையாக மேற் கொள்ளப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து லண்டன் மேயர் சாதிக் கான் கூறும்போது, “இந்தக் கட்டிடத்தில் பாதுகாப்பு குறை பாடுகள் இருந்ததாகவும் முறை யாக பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு விஷ யத்தில் சமரசம் கிடையாது. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என்றார்.

கென்சிங்டன் அண்ட் செல்சீ டெனன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் இந்தக் கட்டிடத்தை நிர்வகித்து வந்துள்ளது. இந்த தீ விபத்து காரணமாக, இந்த நிறு வனம் நிர்வகித்து வரும் சுமார் 10 ஆயிரம் குடியிருப்புகள் மீது அனை வரது கவனமும் திரும்பி உள்ளது.

எச்சரிக்கை புறக்கணிப்பு

இந்தக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்ட போது, இங்கு தீ விபத்து ஏற்படு வதற்கு வாய்ப்பு இருப்பதாக எச்ச ரிக்கை விடுத்ததாகவும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் கிரென்ஃபெல் செயல்பாட்டுக் குழு குற்றம்சாட்டி உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வலை பதிவர் ஒருவர் கிரென்ஃபெல் டவர் கட்டிடம் தொடர்பாக இட்ட பதிவில், “கென்சிங்ஸ்டன் அண்ட் செல்சீ டெனன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் சுகாதாரம் மற்றும் பாது காப்பு சட்ட விதிகளைச் சரியாக கடைப்பிடிப்பதில்லை. ஒரு பேரழிவுச் சம்பவம் நிகழ்ந்தால் மட்டுமே இந்த நிறுவனத்தின் மடத்தனமும் திறமை யின்மையும் நிரூபணமாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தீ விபத்தில் 120 வீடுகளும் முற்றிலும் சேதம் அடைந்தன.

பிரதமர் இரங்கல்

இந்த தீ விபத்து குறித்து பிரிட் டன் பிரதமரின் செய்தித் தொடர் பாளர் கூறும்போது, “கிரென்ஃபெல் கட்டிட தீ விபத்தில் பலியானவர் களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தெரசா மே ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான உதவிகளை மேற் கொள்ளுமாறு காவல் மற்றும் தீயணைப்புத் துறை அமைச்சர் நிக் ஹுர்துக்கு உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

பாதுகாப்பு குறைபாடு இல்லை

இந்தக் கட்டிடத்தின் புதுப்பித்தல் பணியை மேற்கொண்ட ரைடன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “கிரென்ஃபெல் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வேதனையில் நாங்களும் பங்கேற்கிறோம். இந்தக் கட்டிடத்தின் புதுப்பித்தல் பணி கடந்த ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போது, கட்டிடத்தின் தரம், தீ பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரநிலை ஆகியவை தேவையான அளவில் இருந்தன. இதில் எந்தக் குறைபாடும் இல்லை. இது தொடர்பான விசாரணைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம்” என கூறப்பட் டுள்ளது.

மசூதிகள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் உதவிக்கரம்

கிரென்ஃபெல் கட்டிட தீ விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு தேவையான உதவிகளை அப்பகுதியில் உள்ள மசூதிகள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் செய்து வருகின்றன.

இதுகுறித்து சீக்கிய நன்கொடையாளர் ஹர்ஜிந்தர் குக்ரேஜா கூறும்போது, “தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடைமைகளை இழந்து நிற்கின்றனர். தாங்கள் உடுத்தியிருந்த துணியைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. எனவே அவர்களுக்கு தேவையான மாற்று துணிகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை சீக்கிய குருத்வாராக்கள் மூலம் சேகரித்து வழங்கி வருகிறோம்” என்றார்.

லண்டனின் ட்ரெட்கோல்ட் தெருவில் உள்ள செயின்ட் கிளமென்ட்ஸ் தேவாலயமும் தீ விபத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவும் மையமாக மாறி உள்ளது. இதுகுறித்து தொழிலாளர் கட்சி எம்.பி. டேவிட் லம்மி கூறும்போது, “தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக துணிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்கலாம்” என்றார்.

விபத்துக்குள்ளான கட்டிடத்தைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இவர்களும் விபத்தில் உயிர் தப்பியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளனர். இதற்காக அப்பகுதியில் உள்ள மசூதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விபத்திலிருந்து குடும்பத்தினருடன் தப்பிய முகமது கூறும்போது, “காலையில் தாமதமாக எழுந்திருப்பது வழக்கம். ஆனால் இது ரம்ஜான் மாதம் என்பதால் முன்கூட்டியே விழித்ததால் உயிர் தப்பினோம்” என்றார்.

குழந்தைகளை வீசிய பெற்றோர்

கட்டிடத்தின் 9-வது அல்லது 10-வது தளத்தில் இருந்து ஒரு பெண் தனது குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி வீசிய தாகவும் அந்தக் குழந்தையை கீழே இருந்த ஒருவர் கையில் ஏந்திக் கொண்டதாகவும் நேரில் பார்த்த சமிரா லம்ராணி என்பவர் தெரிவித்தார்.

இதுபோல, 5 அல்லது 6-வது தளத்தில் இருந்து ஒரு பெண் தனது 5 வயதுடைய ஒரு ஆண் குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி வீசியதாக ஜாரா என்ற பெண் தெரிவித்தார். அந்தக் குழந்தையும் காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x