Published : 08 Jun 2016 06:10 PM
Last Updated : 08 Jun 2016 06:10 PM

மோடியை அமெரிக்காவிலும் பின்தொடரும் மனித உரிமைகள், மதச் சுதந்திர விவகாரம்

இந்தியாவில் மதச் சுதந்திரம், சிறுபான்மையினர் உரிமைகள், குடிமைச் சமூகத்தின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா விவாதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் 18 உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதச்சகிப்பின்மை, வன்முறை, சிறுபான்மை மக்கள் உரிமைகள், சிவில் சமூகத்தின் மீதான சமீபத்திய கட்டுப்பாடுகள் ஆகிய விவகாரம் பிரதமர் மோடியை அமெரிக்கா வரை அவரைப் பின் தொடர்ந்து சென்றுள்ளது. அமெரிக்க பேரவையின் 18 உறுப்பினர்கள், பேரவைத் தலைவர் பால் ரயானிடம் இத்தகைய விவகாரங்களை பிரதமர் மோடியிடம் விவாதிக்க வலியுறுத்தியுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

பேச்சு வார்த்தைகளின் போது மனித உரிமைகள் விவகாரம் பேசப்பட்டதா என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் கூறும்போது, “இல்லை, விவாதங்களில் இவை இடம்பெற்றதாக நான் கருதவில்லை” என்றார்.

இன்று அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவதை முன்னிட்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகர் பால் ரயானுக்கு எழுதியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் நீடித்து வருகின்றன. மேலும் தொடர்ந்து இவர்கள் வன்முறையான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர், வன்முறைக்கு வித்திடுவோர் தண்டனையிலிருந்து தப்பி விடும் சூழல் நிலவி வருகிறது.

எனவே இருநாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் நட்புறவின் அடிப்படையில் இந்தியாவில் மதச் சுதந்திரம் பேணப்படுவது வலியுறுத்தப்படுவதோடு, இவர்களுக்கு இழைக்கப்படும் பயங்கரங்களுக்கு பொறுப்பேற்கவும் நீதி கிடைக்கவும் உரையாடலின் தேவையையும் வலியுறுத்துவது அவசியமாகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தின் எழுச்சி குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடும் போது இந்த விவகாரம் எழுந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

“பாதுகாப்பு அளவுகோல்களை வளர்த்தெடுப்பதோடு, ஜனநாயக சுதந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அவசியம். தீவிரவாதத்தின் எழுச்சி பற்றிய விவாதத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும் ஜனநாயக நாட்டில் இதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதாவது தீவிரவாதம் நாடுகளுக்கு பெரிய சவால்களை அளித்து வரும் நிலையிலும் கூட சுதந்திரங்களை மறுக்காமல் இந்த விவகாரத்தைக் கையாள்வது பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைய துணை சேர்மன் ஜேம்ஸ் பி. மெக்கவர்ன் கூறும்போது, “அரசியல் சட்ட ரீதியாக பாதுகாப்பு இருக்கும் போதும், சீக்கியர்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த சிறுபான்மையினர் இந்து தேசிய வாத குழுக்கள் மூலம் வன்முறைகளையும், கொடுமைகளையும் சந்தித்து வருகின்றனர். ஆனால் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுபவர்கள் தண்டனையிலிருந்து தப்பி விடும் நிலைமைகள் இருந்து வருகின்றன. மாநில அளவிலான மதமாற்றத் தடைச் சட்டம், இந்து மதத்திலிருந்து மாறுவது சட்டபூர்வமானதா என்பதை மட்டுமே அரசு அதிகாரிகள் கவனிப்பதாக அமைகிறது, மதத்தைத் தேர்ந்தெடுப்பது ஒரு தனிப்பட்ட செயல், இது அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக் கூடாது” என்றார்.

மனித உரிமை ஆணையத்தின் முன்பாக சாட்சியாக வாக்குமூலம் அளித்த இந்திய-அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலைச் சேர்ந்த முசாதிக் தாங்கே என்பவர் கூறும்போது, “முக்கிய நபர்களுக்கு முறையாக பிறந்தநாள் வாழ்த்தை டிவீட் செய்யும் பிரதமர் 5 சர்ச்கள் மற்றும் கிறித்துவப் பள்ளி மீதான தாக்குதலுக்கு வினையாற்ற மாதக் கணக்காகிறது, அப்படி அவர் அதற்கு ஏதாவது கருத்து கூறினாலும் அது முழுமையான கண்டனமாக இருப்பதில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் இந்து மதத்திலிருந்து மாறுவதன் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது, இந்து மதத்திற்கு மாற்றம் செய்வதன் மீது கவனம் செலுத்துவதில்லை.” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x