Published : 06 Oct 2013 09:46 AM
Last Updated : 06 Oct 2013 09:46 AM

அமெரிக்க நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு எப்போது?

அமெரிக்காவில் ஆளும் ஜனநாயகக் கட்சி, எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி இடையே ஏற்பட்டு ள்ள அரசியல் ரீதியிலான மோதல் காரணமாக புதிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் செலவுக்கு நிதியின்றி அரசு நிர்வாகம் 5ம் நாளாக முடங்கிக் கிடக்கிறது.

இதற்கு தீர்வு எப்போது என்பதும் புதிராகவே உள்ளது, அக்டோபர் 1-ம் தேதி புதிய நிதியாண்டு தொடங்கிய நிலையி்ல் புதிய பட்ஜெட்டுக்கு குடியர சுக் கட்சி பெரும்பான்மை வகிக்கும் பிரதிநிதிகள் அவை ஒப்புதல் தரவில்லை. இதனால் நிதி கிடைக்காததால், அத்தியாவசியமற்ற அரசுப் பணிகளை நிறுத்திவைப்பதென செவ்வாய்க்கிழமை முடிவு எடுத்தது அமெரிக்க அரசு. பணிக்கு வரவேண்டாம் என சுமார் 8 லட்சம் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். வேலைக்கு வராத நாள்கள் ஊதியமில்லா விடுப்பாக அறிவிக்கப்பட்டது.

தேசிய பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்றவற்றையும் மூடுவதாக அரசு அறிவித்தது. அரசு நிர்வாகம் முடங்கிட காரணம் குடியரசுக் கட்சிதான் என்று குற்றம்சாட்டி வருகிறார் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரான அதிபர் பராக் ஒபாமா.

குடியரசுக் கட்சியினரோ, புதிய பட்ஜெட்டுக்கு பிரதிநிதிகள் அவை ஒப்புதல் தர தயக்கம் இல்லை. ஒபாமாகேர் எனப்படும் மருத்துவ காப்பீட்டுத்திட்ட அமலாக்கத்தை ஒத்தி வைக்க வேண்டும், அல்லது அந்த திட்டத்தின் சில பிரிவுகளுக்கு நிதி கோர மாட்டோம் என உத்தரவாதம் தந்தால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தருகிறோம் என்று நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்க ஒபாமாவும் அவரது ஜனநாயகக் கட்சியும் தயாராக இல்லை.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2010ம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டதாகும். உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரமும் அதற்குப் பெறப்பட்டுள்ளது. மேலும் 2012 தேர்தலில் இந்த திட்டத்தை மையப்படுத்தி போட்டியிட்ட ஒபாமா வெற்றியும் பெற்றுள்ளார். எனவே, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எந்த விதத்திலும் தொடர்புப்படுத்தாமல், பிரதிநிதிகள் அவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தரவேண்டும் என ஜனநாயக கட்சி தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் அவை தலைவரான ஜான் போனர், அரசு நிர்வாகப் பணிகள் முடக்க ப்பட்டுள்ளதால் மக்கள் தரப்பில் அதிருப்தி மேலோங்கி வருவதைக் கண்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி ஜனநாயகக் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதிநிதிகள் அவையின் பிடிவாதம் காரணமாகவே நிர்வாகப் பணிகளை அரசு முடக்கி வைக்க வேண்டி வந்துள்ளது என்று அதிபர் அலுவலகம் புகார் கூறிவருகிறது.

இதனிடையே, அமெரிக்காவுக்கு இன்னொரு புதிய சிக்கலும் காத்திருக்கிறது. அக்டோபர் 17ம் தேதிக்குள் அந்நாட்டின் கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால், தான் செலுத்த வேண்டிய கடன்களை உரிய நேரத்தில் அடைக்க முடியாமல் அமெரிக்கா நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலை உருவாவது நிச்சயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடன் உச்சவரம்பை உயர்த்த பிரதிநிதிகள் அவை அனுமதிக்குமா என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.

கடன் உச்சவரம்பு உயர்த்தப்படாவிட்டால், இப்போதைய நெரு க்கடியைவிட மிக மோசமானதொரு நிலைமை யை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டிவரும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) எச்சரித்துள்ளது.

பிரதிநிதிகள் அவையின் குடியரசுக் கட்சி தலைவரான ஜான் போனர், தமது கட்சி தலைவர்களுடன் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடத்திய ஆலோசனையில் எந்தவித வழிமுறையும் தென்பட்டதாக தெரியவில்லை. அரசு நிர்வாகம் முடங்கியிரு ப்பதை பொதுமக்களும் விரும்ப வில்லை, நானும் விரும்பவில்லை.

ஒபாமாகேர் திட்டம் உள்பட எல்லா விவகாரங்கள் மீதும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதுதான் சிறந்த வழி என்றார் போனர். முதலில் நிர்வாக முடக்க நிலைக்கு குடியரசுக் கட்சித் தீர்வு காண வேண்டும்.அதற்குப் பிறகுதான் அதனுடன் பேச்சு என்று கைவிரித்து விட்டது வெள்ளை மாளிகை.

வாஷிங்டனில் அனைத்து செயல்பாடும் முடங்கிவிட்டதையே காட்டுகிறது, நிர்வாகப் பணி முடக்கம் என்று கருத்து தெரிவித்துள்ளார் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் இந்திய வம்சாவளி அமெரிக்கருமான லூசியானா ஆளுநர் பாபி ஜிண்டால். இன்னொரு இந்திய அமெரிக்கரும் தெற்கு கரோலினா மாகாண ஆளுநருமான நிக்கி ஹாலி, தனது பேஸ்புக்கில், அரசு நிர்வாக முடக்கத்துக்கு என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்க முடியாது. ஒபாமாவுக்கு தலைமைப் பண்பு துளியும் இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மக்களின் அதிருப்தியால் அவப் பெயர் ஏற்படாதிருக்க, முக்கியத் துவத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மசோதாவாக நிறைவேற்றுவது என குடியரசுக் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால் இத்தகைய திட்டத்துக்கு ஆதரவு தர ஜனநாயக கட்சி தயாராக இல்லை.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x