Last Updated : 26 Jun, 2017 05:23 PM

 

Published : 26 Jun 2017 05:23 PM
Last Updated : 26 Jun 2017 05:23 PM

ஆப்கானுடன் புதிய வர்த்தக உறவு: இந்தியாவின் ‘தைரியமான புவி அரசியல் சிந்தனை’ என சீன நாளிதழ் கருத்து

பாகிஸ்தானுடன் சீனா மேற்கொண்டுள்ள பொருளாதாரப் பாதைத் திட்டத்திற்கு பதிலாக ஆப்கானிஸ்தானுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வான்வழி வர்த்தக உறவுகள் இந்தியாவின் தைரியமான புவி அரசியல் சிந்தனை என்று சீன அரசு நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த வான்வழி சரக்குப் போக்குவரத்தை உருவாக்கியது. இந்தியச் சந்தைகளுக்கு ஆப்கான் எளிதில் நுழைய இது அஸ்திவாரமாகக் கருதப்படுகிறது.

மேலும் ஆப்கானுடன் இணைந்து நம்பகமான மாற்றுப் பொருளாதார பரிவர்த்தனை உறவுகளை வலுப்படுத்த திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆப்கான், இரான் ஆகியோருடன் பேசி சபஹார் துறைமுக மேம்பாட்டுக்கும் முயற்சி செய்து வருகிறது. கடந்த மே, 2016-ல் இது தொடர்பாக 3 நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதனையடுத்து இந்தியாவின் இந்த முயற்சியை கூர்ந்து கவனித்து வரும் சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், “பாகிஸ்தானை ஒதுக்கி விட்டு ஆப்கான் மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா வர்த்தகத்தை வளர்க்க முயற்சி செய்கிறதா?

இத்தகைய தொடர்புகள் பிராந்திய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா செயலூக்கமாக பங்குபெறும் அதன் இச்சையைக் காட்டுவதோடு, இந்தியாவின் தைரியமான புவி-அரசியல் சிந்தனையையும் வெளிப்படுத்துகிறது.” என்று கருத்து தெரிவித்துள்ளது.

சீனா-பாகிஸ்தான் ஒன் பெல்ட் ஒன் ரோடு பொருளாதாரப் பாதை திட்டத்தை இந்தியா எதிர்க்கும் அதே வேளையில் மாற்றுப் பொருளாதாரத் தொடர்புகளை இந்தியா முனைந்திருப்பது தைரியமான அரசியல் சிந்தனை என்கிறது அந்த ஊடகம்.

“இப்பகுதியில் புவி அரசியல் விவகாரங்கள் உள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் பாகிஸ்தானுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை இந்தியா வளர்த்துக் கொள்வதே நல்லது” என்கிறது அந்த நாளேடு.

மேலும், “இந்தியா எப்படி சிந்திக்கிறது என்பது விஷயமல்ல, பொதுவான பொருளாதார வளர்ச்சி குறித்து அக்கறை உள்ள நாடு பாகிஸ்தானை புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில் பாகிஸ்தான் வழிதான் செலவு குறைவான, திறம்பட்ட நிலப்போக்குவரத்துகளுக்குச் சரியானது. எனவேதான் ஒரு பெல்ட் ஒரு ரோடு திட்டத்தில் இந்தியாவும் இணைய வேண்டுமென்று கூறிவருகிறோம்” என்று எழுதியுள்ளது அந்த ஊடகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x