Last Updated : 14 Jun, 2017 02:34 PM

 

Published : 14 Jun 2017 02:34 PM
Last Updated : 14 Jun 2017 02:34 PM

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலர் பலி: தீயணைப்புத் துறை ஆணையர் உறுதிப்படுத்தினார்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 24 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்றில் இன்று (புதன்கிழமை) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏராளமானோர் பலியாகியிருக்கலாம் என தீயணைப்புத் துறை ஆணையர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார்.

மேற்கு லண்டனில் கிரென்ஃபெல் டவர் என்ற குடியிருப்புப் பகுதி உள்ளது. இக்கட்டிடம் கடந்த 1974-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்நிலையில் இக்கட்டிடத்தில் லண்டன் நேரப்படி இன்று அதிகாலை 1.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது.

உடனடியாக விபத்து பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. 40 தீயணைப்பு வாகனங்கள் 200 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும் தீ விபத்தால் கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை சாம்பல் படலமாக காட்சியளிக்கிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பலரும் சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆகஸ்டுக்கு பின்..

சமீப காலத்தில் லண்டனில் நடைபெற்ற மிகக் கோரமான தீவிபத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷெப்பர்ட்ஸ் கோர்ட் பகுதியில் 18 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்றில் தீ பிடித்தது. அந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், இன்று கிரென்ஃபெல் டவரில் நடந்த தீவிபத்தில் உயிர் பலி இருக்கும் என அஞ்சப்படுகிறது.

பலி உறுதியானது:

இது குறித்து லண்டன் தீயணைப்புத் துறையின் ஆணையர் டேனி காட்டன், "அடுக்குமாடி தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர் என்பதை இத்தருணத்தில் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், பலி எண்ணிக்கையை இப்போதைக்கு என்னால் உறுதிப்படுத்த முடியாது" என்றார்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை:

24 மாடி கட்டிடத்தை முற்றிலுமாக நாசமாக்கிய தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், விபத்துக்குள்ளான அக்கட்டிடம் அண்மையில்தான் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அக்கட்டிடத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் மோசமாக இருந்துள்ளன.

கடந்த நவம்பர் மாதம் வலைபதிவர் ஒருவர் கிரென்ஃபெல் டவர் கட்டிடம் தொடர்பாக இட்ட பதிவில், "ஒரு பேரழிவுச் சம்பவம் மட்டுமே கெனிங்ஸ்டன் அண்ட் செல்ஸீ வாடகைதாரர் நிர்வாக சங்கத்தின் மடத்தனத்தையும் திறமின்மையையும் நிரூபிக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

வீடியோ இணைப்பு: