Published : 13 Apr 2017 10:55 AM
Last Updated : 13 Apr 2017 10:55 AM

உலக மசாலா: வன்முறையை எதிர்க்கும் கத்தி தேவன்!

இங்கிலாந்தைச் சேர்ந்த அல்ஃபி பிராட்லி, இரண்டு ஆண்டுகள் உழைப்பில் ‘கத்தி தேவன்’ சிலையை உருவாக்கியிருக்கிறார். 24 அடி உயரத்தில் இருக்கும் இந்தச் சிலையில் 1 லட்சம் கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காவல் நிலையங்களால் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கத்திகள் இவை. ஆர்.ஆர். மார்டினின் கற்பனையில் உருவான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரம் கத்திகளால் உருவாக்கப்பட்ட ஒரு சிம்மாசனம் இடம்பெறும். இவர் அதைப் பார்த்துதான் கத்தி தேவனை உருவாக்கியிருக்கிறார். “குற்றங்கள் இப்போது அதிகம் நடக்கின்றன. கத்திக் குத்தில் ஏராளமான அப்பாவிகள் இறந்து போயிருக்கிறார்கள். அதனால் வன்முறைக்கு எதிரான பிரச்சாரமாக இந்தப் பணியை மேற்கொண்டேன். விஷயம் அறிந்த பொதுமக்கள் தெருக்களில் கிடைத்த கத்திகளைக் கொடுத்தார்கள். சிலையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முயன்றோம். ஆனால் கத்தியைப் பயன்படுத்தி எப்படி ஒரு சிற்பத்தை உருவாக்கலாம், யார் அனுமதி கொடுத்தனர் என்ற கேள்வி எழுந்தது. காவல் நிலையங்கள் தாங்கள் கத்தி கொடுத்த விஷயத்தைச் சொல்ல மறுத்தன. அதனால் அனுமதி கிடைக்கவில்லை. கத்திக் குத்துகளால் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இந்தச் சிலையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்றும் தங்களைப் போல யாரும் அன்பானவர்களை இழந்து துயரப்படக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இனி இந்த கம்பீரமான கத்தி தேவன், கத்தியால் உயிரிழந்தவர்களின் வலிகளைச் சொல்லிக் கொண்டிருப்பான். அதைப் பார்க்கும் குற்றவாளிகளில் சிலர் திருந்தினால் கூட என் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக்கொள்வேன்” என்கிறார் அல்ஃபி பிராட்லி.

வன்முறையை எதிர்க்கும் கத்தி தேவன்!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசிக்கும் 64 வயது லி லியாங்வி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சாயலில் இருக்கிறார். ஒரு பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். “ஒருமுறை என் கண்ணாடியை வேகமாகக் கழற்றி வைத்தேன். உடனே என் நண்பர் இதே மாதிரிதான் ட்ரம்ப்பும் செய்கிறார். உருவமும் ஒத்துப் போகிறது. அதனால் ட்ரம்ப் போல சில விஷயங்களைக் கற்றுக்கொண்டால், பிரபலமாகலாம் என்றார். எனக்கு மார்ஷியல் கலைகள் மீதும் புரட்சிகர பாடல்கள் மீதும் அளவற்ற ஆர்வம் உண்டு. நான் ஏன் ட்ரம்ப்பைப் போல என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் ஒருவர் என்னைக் கட்டாயப்படுத்தி, ட்ரம்ப் போல் நடை, உடை, பேச்சு எல்லாவற்றையும் மாற்றுவதற்குப் பயிற்சியளித்தார். எனக்கு அவரைப் போன்று ஆங்கிலம் பேச வரவில்லை. தலைமுடி, தோல் நிறத்திலும் வித்தியாசம் இருந்தது. பொதுவாக சீனர்களிடம் ட்ரம்ப்க்கு பெரிய வரவேற்பு இல்லை. அதனால் எனக்கு சின்னச் சின்ன விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்புகளே கிடைத்தன. தற்போது சில பொருட்களுக்கு மாடலாக இருந்து வருகிறேன். ஓரளவு நல்ல வருமானமும் கிடைக்கிறது” என்கிறார் லி லியாங்வி.

இது அமெரிக்க அதிபருக்குத் தெரியுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x