Published : 02 Jan 2016 10:02 AM
Last Updated : 02 Jan 2016 10:02 AM

உலக மசாலா: வீழ்ந்தவர்கள் மீண்டெழுந்த அடையாளம்!

ஜப்பானில் கோபி வண்ண விளக்குகள் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பரில் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. கைகளால் செய்யப்பட்ட 2 லட்சம் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. 30 லட்சம் பேர் பார்வையிடுகிறார்கள். 1995-ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் கோபி பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. 4,600 குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தன.

மின்சாரம், தண்ணீர் எதுவும் கிடையாது. கோபி பகுதியே இருளில் மூழ்கிவிட்டது. சோர்வடைந்த மக்களை மீட்டுக்கொண்டு வரும் விதமாக விளக்குகள் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. மக்களிடம் நம்பிக்கை துளிர்த்தது. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் திருவிழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். 2 வாரங்கள் நடைபெறும் விழாவில், தினமும் மாலை சில மணி நேரங்கள் நகரின் விளக்குகள் அணைக்கப்படும். திருவிழா விளக்குகள் மட்டுமே ஒளிரும்.

வீழ்ந்தவர்கள் மீண்டெழுந்த அடையாளம்!

ஸ்பெயினில் விலங்குகள் காப்பகத்தைச் சேர்ந்த இருவர் அந்தக் காட்சியைக் கண்டு ஆச்சரியமடைந்துவிட்டனர். ஓர் ஆண் நாயின் பின் பகுதியில் ஒரு பெண் நாய் தலை வைத்திருந்தது. ஆண் நாய் மெதுவாக நகர, பெண் நாயும் நகர்ந்து சாலையைக் கடந்து சென்றது. பிறகு பெண் நாய் வேகமாக ஓடியது, அதைப் பின்தொடர்ந்து சென்ற ஆண் நாய் பாதுகாப்பாக அதைச் சுற்றியே வந்துகொண்டிருந்தது.

‘‘பெண் நாய்க்குப் பார்வை இல்லை. அதனால் ஆண் நாய் தன் உடல் மீது படுக்க வைத்து அழைத்துச் செல்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. இரண்டு நாய்களையும் எங்கள் காப்பகத்துக்கு அழைத்து வந்தோம். உடல் பரிசோதனைகள் செய்தோம். பார்வை இல்லை என்பது உறுதியானது. ஒருவித வைரஸ் மூலம் பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரி செய்துவிட முடியும் என்றார் மருத்துவர். பெண் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு முற்றிலும் குணமானது. கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு குடும்பம் இரண்டு நாய்களையும் தத்தெடுத்துக்கொண்டது. புதிய வீடு, புதிய மனிதர்களுடன் அண்ணனும் தங்கையும் சந்தோஷமாக வாழ ஆரம்பித்திருக்கின்றன!

விலங்குகளிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன!

கிழக்கு சீனாவின் வுயி பகுதியில் 55 ஆண்டுகளாக இயங்கி வருகிறது யாங்ஜியா மருத்துவமனை. டாங்யிங் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள் வந்தன. தங்கள் ஊழியர்களுக்காகவே இந்த மருத்துவமனையை ஆரம்பித்தது நிர்வாகம். ஒருகட்டத்தில் நிறுவனம் திவாலானது. மருத்துவமனையை தொடர்ந்து நடத்த இயலவில்லை. அரசாங்கம் மருத்துவமனையை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் போதுமான நிதி கிடைக்கவில்லை. 400 நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் வேறு மருத்துவமனைகளுக்குச் சென்றுவிட்டனர். மீதியிருந்த 36 நோயாளிகள் குடும்பத்தோடு இங்கேயே தங்கிவிட்டனர். அனைவரும் ஒற்றுமையாக மருத்துவமனைக்குச் சொந்தமான நிலத்தில் பயிர் செய்து, உணவு சமைத்துக்கொள்கிறார்கள். குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். விளையாடுகிறார்கள். நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் பணத்தில் ஓரளவு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

‘‘எனக்கு 85 வயதாகிறது. 30 ஆண்டுகளாக இங்கே தங்கியிருக்கிறேன். இங்கே குறைந்த வருமானத்தை வைத்து வாழவும் முடிகிறது, சிகிச்சையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. அதனால்தான் அடிப்படைத் தேவைகளை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். ஒரு மருத்துவமனையில் இருக்கும் உணர்வே வந்ததில்லை. எங்கள் வீடுகளுக்கு மருத்துவர்கள் வந்து செல்வதாகவே நினைத்துக்கொள்கிறோம்’’ என்கிறார் லின் ஸிமிங்.

ம்… விநோதமான மருத்துவமனை…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x