Published : 15 Oct 2014 10:05 AM
Last Updated : 15 Oct 2014 10:05 AM

உலக மசாலா: ஸ்பானிஷ் பேசும் கிளி

பிலிப்பைன்ஸ் நாட்டின் டிவி பிரபலம் 31 வயதான பாலோ பல்லஸ்டெராஸ். ஈட் பலாகா என்ற டிவி நிகழ்ச்சி மிகப் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாலோ ஒரு புதுமையைச் செய்து, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அதாவது உலகில் உள்ள பிரபலமான பெண்களைப் போல, மேக் அப் போட்டு, முடி அலங்காரம் செய்துகொள்கிறார்.

கிட்டத்தட்ட அந்தப் பிரபலங்களை ஒத்துப் போவதுதான் பாலோவின் பலம். இதுவரை ஜூலியா ராபர்ட்ஸ், ஜென்னிஃபர் லாரன்ஸ், அரியானா கிராண்ட், கிறிஸ்டன் ஸ்டீவர்ட், லூசி லியு, ஏஞ்சலினா ஜோலி போல் உருவத்தை மாற்றி நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். யுடியூப் மூலம் மேக் அப் கலை நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, தானே மேக் அப் செய்துகொள்கிறார் பாலோ.

ஒருத்தர் முகம் இத்தனைப் பெண்களின் முகங்களுக்கு ஒத்துப் போவது ரொம்பத்தான் ஆச்சரியமா இருக்கு!

கலிஃபோர்னியாவில் ஒரு கால்நடை மருத்துவர் வளர்த்து வந்த ஆப்பிரிக்க சாம்பல் கிளி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போனது. தற்போது அந்தக் கிளி கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவரிடம் சேர்க்கப்பட்டுள்ளது. தொலைந்து போவதற்கு முன்பு வரை ஆங்கிலம் பேசி வந்த கிளி, தற்போது ஸ்பானிய மொழி பேசுகிறது!

கிளி கிட்ட பேசறதுக்காக டாக்டர் ஸ்பானிய மொழியைக் கத்துக்கணும் போல!

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சிகரெட், ஆல்கஹால் போன்றவற்றை வாழ்க்கை முழுவதும் உபயோகித்தால் ஆயுள் எவ்வளவு குறைந்து போகும் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் அமெரிக்காவில் உள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு முறை சிகரெட் புகைக்கும்போதும் வாழ்நாளில் 13.8 நிமிடங்களை இழக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை ஆல்கஹால் சுவைக்கும் போதும் வாழ்நாளில் 6.6 மணி நேரங்களை இழக்கிறார்கள். தினமும் 20 சிகரெட்களைப் புகைத்தால் வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழந்துவிடுவார்கள். தினமும் இரண்டு முறை ஆல்கஹால் எடுத்துக்கொண்டால் வாழ்நாளில் 23 ஆண்டுகளை இழந்துவிடுவார்கள் என்று எச்சரிக்கிறார்கள்.

நம்ம குடிமகன்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

ரஷ்யாவில் வாகன ஓட்டிகளுக்கான கட்டுப்பாடுகளையும் மீறுபவர்களுக்கு வித்தியாசமான தண்டனையும் அளித்து வருகிறது. இது ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு. சட்டத்துக்குப் புறம்பாக வண்டிகளை நிறுத்துவது, வேகமாக வாகனங்களை ஓட்டுவது போன்ற தவறுகளுக்கு முதல் முறை அமைதியான முறையில் எச்சரித்து, அறிவுரை சொல்கிறார்கள். உடனே பல வாகன ஓட்டிகள் தவறுகளை ஒப்புக்கொண்டு, தங்களைத் திருத்திக்கொள்கிறார்கள். சொல்வதை மதிக்காத வாகன ஓட்டிகளின் கார்களின் முன் பக்கம், பெரிய போஸ்டரை ஒட்டி விடுகிறார்கள்.

இந்த போஸ்டர் வாகனம் ஓட்டுவதற்கு இடையூறாக இருக்கும். அதுமட்டுமின்றி, ’நான் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், என் விருப்பத்துக்கு எங்கே வேண்டுமானாலும் வாகனங்களை நிறுத்துவேன்’ என்ற செய்தியும் அதில் இருக்கும். இந்த அமைப்பின் தலைவர் டிமிட்ரி சுகுனவ், ‘மக்களுக்குத் துன்பம் தரக்கூடாது என்பதற்காகவும் வாகன ஓட்டுபவர்கள் மனித உயிர்களை மதித்து நடக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த அமைப்பை ஆரம்பித்தோம். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது’ என்கிறார்.

உங்க அமைப்புக்குத் தமிழ்நாட்டில் நிறைய வேலை இருக்கும் டிமிட்ரி.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x