Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM

இலங்கை போர்க்குற்றம்: சேனல் 4 டி.வி. புதிய வீடியோ

இலங்கை பாதுகாப்புப் படைகளின் காட்டுமிராண்டித்தனத்தையும் மற்றும் பாலியல் வன்முறை செயல்களையும் காட்டும் புதிய வீடியோ ஒன்றை சேனல் 4 தொலைக்காட்சி ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டது.

6 நிமிடநேரம் கொண்ட இந்த வீடியோவை டிவி நிருபர் கல்லம் மெக்ரே தயாரித்துள்ளார். ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் மீது மார்ச் 28ம் தேதி பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு வாக்களிக்க உள்ளன.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிகட்டபோரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி ஐநா மனித உரிமை ஆணை யர் அலுவலகத்தின் உதவியுடன் சர்வதேச விசாரணை நடத்தக் கோருகிறது அமெரிக்கா தீர்மானம்.

இதற்கு முன்னரும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் தொடர் பான வீடியோவை வெளியிட் டுள்ளார் மெக்ரே. இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றி சர்ச்சையை தோற்றுவித்தன முந்தைய வீடியோ ஆவணப் படங்கள்.

புதிய வீடியோ பதிவு செய்யப்பட்டது எப்போது என்பது தெரியவில்லை.

இருப்பினும் போர் நடந்த கடைசி இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தனது மொபைல் போனில் ஒரு படைவீரரே இதை பதிவு செய்திருக்கலாம் என்றும் மெக்ரே தெரிவித்திருக்கிறார்.

வீடியோவில் உள்ள படம் தெளிவாக தெரியவில்லை. சீருடை அணிந்த நபர்கள் அங் கேயிருக்கும் சடலங்கள் மீது ஏறி சிங்களத்தில் பேசியபடி மகிழ்ச்சியை கொண்டாடுவது பதிவாகி இருக்கிறது. பெண் விடுதலைப்புலிகளின் சடலங்கள் இவை என வீடியோ மீதான விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த நடவடிக்கைகளுக்கு ராணுவத்தின் உயர் அதிகாரிகளும் அரசுமே காரணமாக இருக்கும் என எல்லா ஆதாரங்களையும் ஆராய்ந்தால் தெரியவருகிறது என்று மெக்ரே அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டனில் உள்ள பிரிட்டிஷ் தமிழ் பேரவை அமைப்பு ஒன்று இந்த வீடியோவை வழங்கியுள்ளது.

புதிய வீடியோ பற்றி இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் ருவான் வனிக சூரிய கூறியதாவது:

இலங்கை அரசையும் ராணுவத் தையும் இழிவுபடுத்தும் நோக்கில் சேனல் 4 மேற்கொண்டுள்ள திட்டத்தின் தொடர்ச்சிதான் இது. வெளிநாடுகளில் உள்ள புலிகள் ஆதரவு தமிழர் அமைப்புகளுடன் கைகோத்து செயல்படுகிறது சேனல் 4. பிரிவினை கோரிக்கையை கை விடாமல் இன்னும் தொடர்ந்து ஆதரிக்கின்றன இந்த தமிழர் அமைப்புகள் என்றார் வனிக சூரிய.

இதனிடையே, லண்டனிலிருந்து ‘தி இந்து’விடம் மெக்ரே கூறுகையில் இந்த வீடியோ உண்மையானதுதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீடியோவை கொடுத்தவரையும் சந்தேகப்பட முடியாது. வீடியோவில் உள்ள படங்களை வீடியோ நிபுணர்களிடம் கொடுத்து சுயேச்சையான வழியில் ஆய்வு செய்து நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளோம்.

இந்த வீடியோ வெளியான நேரமும் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது வாக்களிக்க உள்ள நாடுகளில் வீடியோ வெளியானதும் தற்செயல் நிகழ் வாகும். அண்மையில்தான் வீடியோ கிடைத்தது. அதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க சில காலம் பிடித்தது. ஐநா மனித உரிமை பேரவைக் கூட்டத்தின் போது இதை வெளியிடுவதை தலைகுனிவான செயலாக நான் பார்க்கவில்லை. முக்கியமான தருணத்தில் இதை வெளியிடுவது பத்திரிகையாளரின் கடமை என்றார் மெக்ரே.

சீருடை அணிந்த நபர்கள் சடலங்கள் மீது ஏறி சிங்களத்தில் பேசியபடி கொண்டாடுவது பதிவாகி இருக்கிறது. பெண் விடுதலைப்புலிகளின் சடலங்கள் இவை என விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x