Last Updated : 02 May, 2016 06:16 PM

 

Published : 02 May 2016 06:16 PM
Last Updated : 02 May 2016 06:16 PM

இத்தாலி கடற்படை வீரரை இந்தியா விடுவிக்க ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு

கைது செய்து கடந்த 4 ஆண்டுகளாக வைத்திருக்கும் இத்தாலியக் கடற்படை வீரரை விடுவித்து இத்தாலிக்கே அனுப்ப வேண்டும் என்று ஐ.நா. நடுவர் நீதிமன்றம் இந்தியாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனை இத்தாலி வெளியுறவு அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு 2 இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்றதாக சந்தேக அடிப்படையில் கைது செய்யப்பட்ட இத்தாலிய கடற்படை வீரர்களில் ஒருவர் உடல் நலக்கோளாறு காரணமாக ஏற்கெனவே இத்தாலிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் மற்றொரு கடற்படை வீரரான சால்வடோர் கிரோனி என்பவரை இத்தாலிக்கு அனுப்ப இந்திய அரசு மறுத்து விட்டது.

இந்த விவகாரத்தில் இந்திய-இத்தாலி உறவுகளில் விரிசல் ஏற்பட ஹேகில் உள்ள நிரந்தர ஐ.நா. நடுவர் நீதிமன்ற முடிவுக்கு இந்த வழக்கை இருநாடுகளும் விட்டுவிட்டன.

இந்நிலையில் இங்கு காவலில் உள்ள சால்வடோர் கிரோனியை விடுவித்து இத்தாலிக்கு அனுப்ப முதற்கட்ட உத்தரவு வெளியாகியுள்ளதாக இத்தாலி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு இவரை உடனடியாக இத்தாலிக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இத்தாலி வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

எனினும், இரு கடற்படை வீரர்களுக்கு எதிரான இந்த வழக்கின் தகுதிகளை கோர்ட் தொடர்ந்து சீராய்வு செய்யவுள்ளது.

பின்னணி விவரம்:

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி என்ரிகா லெக்சி என்ற இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலில் இருந்தவர்கள் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெலஸ்டைன், அஜீஸ் பிங்கு என்ற 2 இந்திய மீனவர்களை அம்பலப்புழா கடல் பகுதியில் சுட்டுக்கொன்றதாக புகார் எழுந்தது. மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என்று கருதியதாக இத்தாலிக் கடற்படையினர் தெரிவித்தனர்.

2012, பிப்ரவரி 19-ம் தேதியன்று கேரள போலீஸ் இத்தாலிய கடற்படை வீரர்களை கைது செய்தனர். கேப்டன் உம்பர்த்தோ வைடெல்லியிடமும் விசாரணை நடத்தினர். பிறகு இருவரும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. துப்பாக்கிச் சூடு நடந்த போது சர்வதேச கடல் பகுதியில்தான் இத்தாலிய டேங்கர் கப்பல் இருந்தது என்றும் எனவே இந்தியா இவர்களைக் கைது செய்ய முடியாது என்றும் இத்தாலி தரப்பில் கூறப்பட்டது

இதனையடுத்து இருநாட்டு வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையே அமைச்சர்கள்மட்ட ஆலோசனைகள் நடைபெற்றது ஆனால் தீர்வு ஏற்படவில்லை.

மார்ச் 1, 2012-ல் கடற்படை வீரர்களுக்கு எதிராக தங்கள் நாட்டிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அதன் படி 21 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை கிடைக்கும் என்று இத்தாலி அரசு இந்தியாவுக்கு தகவல் அனுப்பியது.

மார்ச் 7, 2012-ல் இத்தாலி பிரதமர் மரியோ மோண்ட்டி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை அழைத்து சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

இப்படியே சென்று கொண்டிருந்த இந்த விவகாரத்தில் மே 30-ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் இத்தாலி கடற்படையினருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது. அதாவது ரூ.1 கோடி பிணை மற்றும் கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து 10 கிமீ சுற்றுப்பரப்பில் இருவரும் இருப்பது அவசியம் என்று நிபந்தனை விதித்தது உயர் நீதிமன்றம்.

டிசம்பர் 21, 2012-ல் இருவரது பாஸ்போர்ட்டும் விடுவிக்கப்பட்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இருவரும் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனவரி 4, 2013-ல் இருவரும் கேரளா திரும்பினர்.

மீண்டும் பிப்ரவரி 22, 2013-ல் கடற்படை வீரர்கள் இருவரும் இத்தாலி தேர்தலில் வாக்களிக்க இத்தாலி செல்ல கோர்ட் அனுமதி அளித்தது.

ஆனால் மார்ச் 11-ல் இத்தாலி அரசு இருவரையும் இந்தியா அனுப்ப மறுத்தது. இந்நிலையில் இருநாடுகளுக்கான உறவில் கடும் விரிசல் ஏற்பட, மார்ச் 14, 2013-ல் சர்வதேச தீர்ப்பாயத்தை நாட போதிய அடிப்படைகள் இருப்பதாக இத்தாலி தெரிவித்தது.

இதனையடுத்து இந்திய உச்ச நீதிமன்றம் இத்தாலியின் செயலைக் கண்டித்ததோடு, இந்தியாவுக்கான இத்தாலிய தூதர் டேனியல் மன்சினியை நாட்டை விட்டுச் செல்லக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.

மார்ச் 18,2013-ல் வியன்னா ஒப்பந்தத்தின் படி இந்தியா தன்னை இதில் பிணைக்க முடியாது என்று தூதர் மன்சினி கோரினார், ஆனால் இதனை ஏற்காத உச்ச நீதிமன்றம் இருவரையும் இத்தாலிக்கு அனுப்ப மனுதாரராக செயல்பட்ட தூதர் எந்தவித பாதுகாப்பையும் கோர முடியாது என்று கடுமையாக மறுத்தது.

இதனையடுத்து மார்ச் 21, 2013-ல் கடற்படையினரை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி ஒப்புக் கொண்டது. இதனையடுத்து வழக்கில் இழுபறி நிலை நீடிக்க ஜூலை 26, 2015-ல் சர்வதேச கடல்சார விவகார தீர்ப்பாயத்தை இத்தாலி அணுகியது.

அதன் பிறகு ஆகஸ்ட் 26, 2015-ல் கடற்படையினருக்கான விசாரணைகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் உடல் நலத்தைக் காரணம் காட்டி 2014-ம் ஆண்டு இத்தாலிக்கு அனுப்பப்பட்ட மஸிமிலியானோ லட்டோர் என்ற கடற்படை வீரர் இந்தியாவுக்கு திரும்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஐநா. மத்தியஸ்த நீதிமன்றம் இங்கு இந்திய அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு கடற்படை வீரரான கிரோனையும் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x