Last Updated : 16 Dec, 2013 12:00 AM

 

Published : 16 Dec 2013 12:00 AM
Last Updated : 16 Dec 2013 12:00 AM

மரண வியாபாரிகளின் பிசினஸ் மாடல்

உலகெங்கும் பல தேசங்களில் யுத்தம் நடக்கிறது. புரட்சி நடக்கிறது. கலவரம் நடக்கிறது. சில புரட்சிகள் நியாயமானவை. பல உள்நோக்கம் கொண்டவை. ஆட்சி மாற்றம், அதிகார மாற்றம், பதவிப் பித்து தலைக்கேறி கவிழ்ப்பு முயற்சிகளில் ஈடுபடுவோர் தூண்டிவிட்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.

எதற்கென்றே தெரியாத புரட்சிகள். ஏனென்று புரியாத யுத்தங்கள். தினசரி மரணம். கை இழந்து, கால் இழந்து, வாழ்க்கை இழந்து அகதிகளாகத் திரிகிற அவலம் எங்கும் இருக்கிறது. இது அரசியல். போராளி இயக்கங்களும் தீவிரவாத இயக்கங்களும், எதிர்ப்பக்கம் அரசுகளும் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி நிகழ்த்துகிற அரசியல்.

இந்த அரசியலுக்குப் பின்னால் இருக்கிற ஆயுத வியாபாரம் அரசியல் லாபங்களைக் காட்டிலும் மிகப் பெரிது. வருடம்தோறும் உலகளாவிய சட்ட விரோத ஆயுத வியாபார நிலவரம் குறித்த சர்வே வெளியிடும் Small arms Survey நிறுவனம் இந்த ஆண்டுக்கான தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. தூக்கிவாரிப் போடச் செய்யும் பல தகவல்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை உலகமெங்கும் நிழலாக நடைபெறும் பிரம்மாண்டமான ஆயுத பேரங்கள் குறித்த பல முக்கியத் தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

உலகெங்கும் நிகழும் கலவர மரணங்களில் 42 முதல் 60 சதவீத மரணங்கள் துப்பாக்கிச் சூட்டில் நிகழ்கின்றன. ஒவ்வொரு மரணத்துக்கும் மூன்று படுகாய பாதிப்பாளர்கள் உண்டு. சுருக்கமாகச் சொல்வதென்றால் நான்கு பேர் குண்டடி பட்டால் ஒரு மரணம் நிச்சயம்.

இந்த ஒரு மரணத்துக்கு சுமார் ஒன்பது முதல் பதினான்கு தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. என்றால் பல்லா யிரக்கணக்கான மரணங்களுக்குப் பின்னால் உள்ள லட்சக்கணக்கான தோட்டாக்களையும் துப்பாக்கிகளையும் - அவற்றின் வியாபார சாத்தி யங்களையும் யோசித்துப் பாருங்கள்.

ஒரு புறம் தீவிரவாதிகளை ஒடுக்க அரசாங்கங் களே செய்யும் கொள்முதல். மறுபுறம் இயக்கங்கள் தமது தேவைக்காகச் செய்யும் ஆயுதக் கொள்முதல். இதில் அதிகாரபூர்வமான, வெளிப்படையான கொள்முதல் என்பது மிகக் குறைவு. பெரும்பாலும் நிழல் வியாபாரம்தான்.

2013 நிலவரப்படி லெபனான், மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் சோமாலியாவில்தான் மிக அதிக கள்ள ஆயுத விற்பனை நடந்திருக்கிறது. சிரியா, எகிப்து, இராக், ஆப்கனிஸ்தான், சூடான், பாகிஸ்தான் போன்ற தேசங்களில் இவற்றின் பயன்பாடு மிகுதியாக இருந்திருக்கிறது.

சாதாரண துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏகே ரகங்கள், வெடி குண்டுகள், கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் - என்னவும் கிடைக்கும், எவ்வளவு வேண்டுமா னாலும் கிடைக்கும். இவற்றுக்கான விலை என்பது நிரந்தரமான ஒன்றல்ல.

நாட்டுக்கு நாடு மாறுபடுவதும் அல்ல. ஆனால் கேட்பவர்களின் அவசரம் மற்றும் அவசியத்தைப் பொருத்தே ஆயுதங்களின் விலை தீர்மானிக்கப்படுகிறது.

அடுத்த மாசம் ஒரு லோடு ஏகே 47 அனுப்பி வை என்று புறா காலில் கடுதாசி கட்டி அனுப்பிவைத்துவிட்டு பணத்தை மணியார்டரில் அனுப்பினால் (ஒரு பேச்சுக்கு ஐயா!) விலை சற்று சகாயமாக இருக்கும். நாளைக்கே புரட்சி ஆரம்பித்து நாளை மறுநாள் ஆட்சியைப் பிடித்தாகவேண்டும், இன்று ராத்திரிக்குள் இருநூறு பெட்டி வெடிகுண்டுகள் தேவை என்றால் அதற்கு வேறு விலை.

இதன் சூட்சுமங்கள் நமக்குப் புரியாதவை. அவசியமும் அல்ல. ஆனால் இந்த கள்ள ஆயுத வியாபாரம் இந்த ஆண்டு முன்னெப்போதை யும்விடப் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

மேற்படி மரண வியாபாரிகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் அதிகம். ஒரு காலத்தில் சி.ஐ.ஏ வளர்த்து ஆதரித்து ஊக்குவித்த ஆயுத உற்பத்தியாளர்களின் அடிப்பொடிகளே இன்று உலகெங்கும் இந்த வியாபாரத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஷ்யாவிலும் பங்களாதேஷிலும் துர்க்மெனிஸ்தானிலும் சிரியா மற்றும் சூடானிலும் மிகப் பிரம்மாண்டமான முறையில் இதற்கான தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன.

மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள். இந்த வருஷம் நாளது தேதி வரை உலகெங்கும் விற்பனையாகியிருக்கும் துப்பாக்கிகளின் மொத்த மதிப்பு சுமார் இருநூறு மில்லியன் டாலர் (சுமார் ரூ. 1,243 கோடி) இவை பலிவாங்கும் உயிர்களின் மதிப்பு குறித்து யாருக்குக் கவலை?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x