Last Updated : 30 Jun, 2016 04:18 PM

 

Published : 30 Jun 2016 04:18 PM
Last Updated : 30 Jun 2016 04:18 PM

கலிபோர்னியா பல்கலை.க்கு இந்தியர் ரூ.75 கோடி நன்கொடை

கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்கா வாழ் இந்திய இயற்பியலாளர் சுமார் ரூ. 75 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

அப்பல்கலைக்கழகத்தின் இயற்கை அடிப்படை விதிகள் குறித்த ஆய்வுகள், படிப்புகளுக்கான மையத்தை விரிவுபடுத்த இத்தொகை பயன்படுத்தப்பட உள்ளது.

மணி பாவ்மிக் என்ற இந்தியர்தான் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். அந்தப் பல்கலைக்கழகத்துக்கு இதுவரை வழங்கப்பட்ட நன்கொடைகளிலேயே இதுதான் மிக அதிகம்.

கலிபோர்னியா பல்கலைக்கழக வேந்தர் ஜெனி பிளாக் கூறும்போது, “மணி பாவ்மிக்கின் வள்ளல்தன்மைக்காகவும், இந்த பல்கலைக்கழகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்காவும் அவருக்கு நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நன்கொடை மூலம் அமையவிருக்கும் மணி எல் பாவ்மிக் கோட்பாட்டு இயற்பியல் ஆய்வு மையம், உலகின் முன்னணி ஆய்வு மையமாக இரு்க்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த பாவ்மிக், கடினமாக உழைத்து விஞ்ஞானியாக உயர்ந்தார். லேசர் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். லேசர் கண் அறுவைச் சிகிச்சையில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

“என் 16 வயது வரை என்னிடம் செருப்போ, ஷூக்களோ இல்லை. பள்ளிக்கு வெறும் காலுடன் நான்கு மைல்கள் நடந்து சென்று, படித்துவிட்டு வீடு திரும்புவேன்” என பாவ்மிக் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற இயற்பியலாளர் சத்யேந்திர போஸிடம் பயின்று, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

1958-ம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பாவ்மிக் பெற்றார்.

“1959-ம் ஆண்டு வெறும் 3 டாலர்களுடன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு ஸ்லோவன் முதுமுனைவர் ஆய்வுக்காக வந்தேன். என் கிராம மக்கள் விமானக் கட்டணத்துக்காக நிதி திரட்டிக் கொடுத்தனர்” என பாவ்மிக் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x