Published : 01 Jun 2017 09:26 AM
Last Updated : 01 Jun 2017 09:26 AM

உலக மசாலா: ஸ்மார்ட்போனில் காபி

இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் Mokase என்ற ஸ்மார்ட்போன் உறைகளைத் தயாரித்திருக்கிறது. இதை ஸ்மார்ட்போனில் மாட்டிக்கொண்டால், தேவையானபோது சூடான காபியைப் பருகிக்கொள்ளலாம். மக்கள் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கிறார்கள். சிறிதளவு காபிக்கு எவ்வளவு பெரிய பதற்றத்தையும் குறைத்துவிடும் சக்தி இருக்கிறது. ஆனால் காபி கடையைத் தேடிச் செல்லவோ, காபி இயந்திரத்தை நாடவோ அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அதனால்தான் ஸ்மார்ட்போன் உறையிலேயே காபியை உருவாக்கிவிட்டோம் என்கிறார்கள். இந்த உறையை வாங்கி ஸ்மார்ட்போனில் மாட்டி, அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, இவர்கள் அளிக்கும் காபி காப்சூல்களை உறைக்குள் போட வேண்டும். இந்த காப்சூலுக்குள் தண்ணீரும் காபித்தூளும் கலந்திருக்கும். ஒரு பட்டனை அழுத்தினால் 50-60 டிகிரி செல்சியஸில் சூடான காபி தயாராகிவிடும். இன்னொரு பட்டனை அழுத்தி வெளியே வரும் காபியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஒரு காப்சூலுக்கு 25 மி.லி. காபி கிடைக்கும். புத்துணர்வூட்ட இது போதுமானது. சூடான காபி தயாரிக்கும் உறையால் ஸ்மார்ட்போனுக்கு எந்த ஆபத்தும் வராது. உறையின் விலை 3,600 ரூபாய். 15, 30, 50 என்ற எண்ணிக்கைகளில் காப்சூல்களையும் வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த உறையை ஆப்பிள், சாம்சங், எல்ஜி போன்ற பிரபல மாடல்களில் பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போனில் காபி; தொழில்நுட்பத்தின் உச்சம்!

பிரிட்டனின் மான்செஸ்டர் குண்டுவெடிப்பின் போது துணிச்சலுடன் இறங்கி, சிலரைக் காப்பாற்றியிருக்கிறார் 33 வயது கிறிஸ் பார்கர். இரண்டு கால்களையும் இழந்த இளம் பெண்ணையும் மோசமாகக் காயமடைந்த 60 வயது பெண்மணியையும் காப்பாற்றிய செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. சில நாட்களுக்குப் பிறகு தன்னைக் காப்பாற்றிய கிறிஸ் பார்க்கரைத் தேடி வந்தார் மரிஸ்ஸா லோவ். “குண்டு வெடிப்பு நிகழ்ந்த அதே இடத்தில் மீண்டும் கிறிஸை சந்தித்தேன். நன்றியுடன் அவரைக் கட்டி அணைத்துக் கொண்டேன். அன்று பார்த்தது போலவே அழுக்கு உடையில் காணப்பட்டார். தங்குவதற்கு வீடின்றி, தெருக்களில் வாழ்ந்து வருவதாக தொலைக்காட்சி மூலம் அறிந்திருந்தேன். இதுவரை அவருக்கு யாராவது உதவியிருக்கக்கூடும் என்று நினைத்தேன். ஆனால் இன்னும் தெருவில் வாழ்ந்து கொண்டிருப்பது வருத்தத்தை அளித்தது. கையிலிருந்த பணத்தைக் கொடுத்தேன். அவருக்கு சுமார் 41 லட்சம் ரூபாயைத் திரட்டிக் கொடுக்க இருக்கிறோம். தன் உயிரைப் பொருட்படுத்தாமல் பலரின் உயிரைக் காப்பாற்றியவருக்கு எங்களால் முடிந்த உதவி” என்கிறார் மரிஸ்ஸா. 5 ஆண்டுகளாக தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் கிறிஸ்ஸை, தொலைக்காட்சிகள் மூலம் அறிந்துகொண்ட அவரது அம்மா ஜெஸிகா பார்கர் மகனைத் தேடி வந்துவிட்டார். தன்னை ஒரு ஹீரோவாக எல்லோரும் கொண்டாடுவதை கிறிஸ் விரும்பவில்லை. “யாராக இருந்தாலும் இதுபோன்ற சூழ்நிலையில் உயிர்களைக் காப்பாற்றியிருப்பார்கள். சராசரி மனித இயல்பைக் கொண்டாடாதீர்கள்” என்கிறார் இவர்!

தன்னலம் கருதாத நல்ல மனிதருக்கு இனி குறை ஒன்றும் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x