Published : 08 Oct 2014 09:41 AM
Last Updated : 08 Oct 2014 09:41 AM

உலக மசாலா: அணிர் பர்கர் திருவிழா

பாரிஸ் நகரின் அடையாளமாக இருக்கும் ஈபிள் டவருக்கு 125 வயதாகிறது. இதனைக் கொண்டாடும் விதத்தில் 324 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கோபுரத்தின் முதல் தளம் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கிறது. 57 மீட்டர் உயரத்தில் இருக்கும் முதல் தளத்தில் இருந்து பார்த்தால் கீழே இருக்கும் மனிதர்கள் உட்பட அனைத்து விஷயங்களும் சிறியதாகவும் அழகாகவும் தெரிகின்றன. பார்வையாளர்கள் மத்தியில் இந்தக் கண்ணாடித் தளத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஆஹா! உலக அதிசயத்தை மேலும் அதிசயமா மாத்திட்டே இருக்காங்க!

ஆரஞ்சு, மஞ்சள் வண்ணத்தில் அழகான வடிவத்தில் காணப்படும் மேப்பிள் இலைகளைப் புகைப்படங்களில் பார்த்திருப்போம். இனிப்புச் சுவை கொண்ட இந்த இலைகள் இப்போது ஜப்பானியர்களின் விருப்பத்துக்குரிய சிப்ஸாக மாறியிருக்கின்றன. மேப்பிள் இலைகள் பறிக்கப்பட்டு, உப்புச் சேர்த்துப் பதப்படுத்தப்படுகின்றன. ஓராண்டுக்குப் பிறகு, இலைகளை இனிப்பு கலந்த மாவில் நனைத்து எண்ணெயில் பொறித்தால் இலை சிப்ஸ் தயார்!

எங்க ஊரிலும் மூலிகை இலை பஜ்ஜி எல்லாம் இருக்குங்க!

இங்கிலாந்தில் அணில் பர்கர் உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. சாம்பல் அணில்களின் எண்ணிக்கை பெருகி, மரங்களுக்குப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. அணில்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இந்த உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுவையான அணில் பர்கர் செய்பவர்களுக்கு அட்டகாசமான பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஏராளமான போட்டியாளர்களும் பார்வையாளர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர். விலங்குகள் உரிமைக்காகப் போராடும் அமைப்பினர், இந்த விழாவுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். கோழி, முயல் போன்று இதுவும் ஓர் உணவு, அவ்வளவுதான் என்கிறார்கள் ஆதரவாளர்கள். பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

ம்ம்… சைவம் – அசைவம் பிரச்னை எப்பதான் தீருமோ தெரியலை…

லண்டனில் வசிக்கும் லஸாரஸ், ஸோர்பா என்ற ஆப்பிரிக்க கிளியை வளர்த்து வந்தார். சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தக் கிளி லஸாரஸ் சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்லக்கூடியது. ஒருநாள் கூண்டைச் சுத்தம் செய்யும்போது ஸோர்பா பறந்து சென்றுவிட்டது. பல இடங்களில் தேடினார் லஸாரஸ். ஆறு வாரங்களுக்குப் பிறகு ஸோர்பா காவல்துறையினரால் மீட்கப்பட்டது. ஸோர்பா பற்றிய அறிவிப்பு வெளியானதும், பலரும் தங்களுடைய கிளி என்று சொந்தம்கொண்டாடினர். லஸாரஸும் வந்து சேர்ந்தார்.

அவர் சொன்ன எந்த அடையாளமும் கிளியிடம் அப்போது இல்லை. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, போன் வந்தது. 'ஹலோ.. ஹலோ.. ஹலோ.. ' என்றார். அவ்வளவுதான்! ஸோர்பாவும் அவரைப் போலவே மூன்று முறை ஹலோ சொன்னது. இருவரது குரலும் ஒத்துப் போனதால் காவல் துறையினர் லஸாரஸிடம் கிளியை ஒப்படைத்தனர்.

பொல்லாத கிளியே… வளர்த்தவரைப் பார்த்ததும் பறந்து வந்திருக்க வேணாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x