Published : 18 Jun 2016 06:33 PM
Last Updated : 18 Jun 2016 06:33 PM

இந்தோனேஷியாவில் தவிக்கும் இலங்கைத் தமிழர்களின் கதி?

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுகொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் படகு இந்தோனேஷிய பகுதியில் கரை ஒதுங்கியதால் அந்தப் படகில் பெண்கள், குழந்தைகள் உட்பட 49 பேர் பரிதவித்து வருகின்றனர்.

கடந்த 11-ம் தேதி இந்தோனேஷியாவின் ஆசே பகுதி லோகாங்கா கடல் பகுதியில் ஒரு படகு என்ஜின் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தது. அதைக் கண்ட அந்த நாட்டு மீனவர்கள், இந்தோனேஷிய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பின், கடற்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். படகில் 9 சிறுவர்கள், பெண்கள் உட்பட 49 பேர் இருந்தனர். அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்தோனேஷியாவில் தரையிறங்க கடற்படை வீரர்கள் அனுமதிக்கவில்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டால் 5 நாட்களுக்குப் பிறகு அந்தப் படகு கரைக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதன்பிறகும் படகில் இருந்து யாரும் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் மட்டும் படகுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டன.

சில பெண்கள் தரை இறங்கியபோது இந்தோனேஷிய வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் பெண்கள் மீண்டும் படகில் ஏற்றப்பட்டனர்.

ஐ.நா. மனித உரிமை ஆணையம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட அமைப்புகளின் நெருக்குதலால் நேற்று தமிழ் அகதிகள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

என்ன சொல்கிறது இந்தோனேஷிய அரசு?

இந்தோனேஷிய துணை அதிபர் ஜுசப் கல்லா ஜகார்தாவில் நிருபர்களிடம் கூறும்போது, "கடந்த 11-ம் தேதி ஆசே பெஹர் கடல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 49 தமிழ் அகதிகள் ஒரு படகில் தத்தளிப்பது தெரியவந்தது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அகதிகளுக்கு தேவையான உணவு, மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பழுதடைந்த படகை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது.

தமிழ் அகதிகளின் இலக்கு இந்தோனேஷியா அல்ல. அவர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். இந்திய கடல் பகுதியில் இருந்து சுமார் 20 நாட்கள் கடல் பயணத்துக்குப் பிறகு இந்தோனேஷிய கடல் எல்லைக்கு அவர்கள் வந்துள்ளனர்.

அவர்கள் விரும்பும்போது இந்தோனேஷியாவை விட்டு புறப்படலாம். இந்தோனேஷிய கடல் எல்லை வரைக்கும் எங்களது கடற்படை பாதுகாப்பு அளிக்கும். அதன்பிறகு சர்வதேச எல்லைக்குச் சென்றபிறகு அகதிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அவர்கள் விருப்பப்படி செயல்படலாம்" என்று தெரிவித்துள்ளார்.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் வேண்டுகோள்

அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தென்கிழக்கு ஆசிய இயக்குநர் ஜோசப் பெனடிக்ட் கூறும்போது, "ஒரு கர்ப்பிணி பெண், 9 சிறுவர்கள் உட்பட 49 பேர் படகில் பயணம் செய்துள்ளனர். அவர்களை அகதிகளாக பதிவு செய்ய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தாலும் இன்னமும் இனவாதம் நீடிக்கிறது. அதன் காரணமாகவே அகதிகள் தங்கள் உயிரை பயணம் வைத்து கடல் பயணம் மேற்கொள்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

அகதிகளின் நிலைப்பாடு?

இந்தோனேஷியாவில் கரை ஒதுங்கியுள்ள தமிழ் அகதிகள் மீண்டும் தங்கள் ஊருக்கே திரும்பி செல்ல வேண்டும் என்று அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தமிழ் அகதிகள் அதை விரும்பவில்லை. அவர்கள் ஆஸ்திரேலியா செல்லவே விரும்புகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத அகதிகளுக்கு இடமில்லை என்று அந்த நாட்டு அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. எனவே 49 தமிழர்களின் நிலை என்னவாகும் என்பது இப்போதைக்கு கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

இதனிடையே, இந்தோனேஷிய கடற்கரையில் போராடுகின்ற இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத் தலைவர்கள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x