Published : 22 Jun 2016 10:39 AM
Last Updated : 22 Jun 2016 10:39 AM

உலக மசாலா: தோலுக்கு மாற்று!

விலங்குகளின் தோல் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு மாற்றாக பாலியுரெதேன், பிவிசி போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இவை சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. பினாடெக்ஸ் என்ற புதிய பொருள், அன்னாசிப் பழத்தின் இலைகளில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்தது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் டாக்டர் கார்மென் ஹிஜோஸா. 1990-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் அனனாஸ் அனம் என்ற நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோதுதான், அன்னாசி இலைகளின் நார்களில் இருந்து புது வகையான தோல் போன்ற பொருளை உருவாக்க முடியும் என்று கண்டறிந்தார்.

அதற்குப் பிறகு அன்னாசி இலைகளை வைத்துப் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று தோல் பொருட்களுக்கு மாற்றாக இந்த அன்னாசி இலை பொருட்களை உருவாக்கிவிட்டது அனனாஸ் அனம் நிறுவனம். சமீபத்தில் லண்ட னில் பினாடெக்ஸ் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. துணிகள், கைப்பைகள், ஷூக்கள் என்று தோலால் செய்யக்கூடிய பல வகைப் பொருட்களையும் அன்னாசி இலை நாரில் செய்து அசத்தியிருந்தனர். விவசாயிகள் அன்னாசிச் செடிகளை வெட்டி எடுக்கும் முன், இலைகளில் இருந்து நாரை எடுத்து விடுகின்றனர். இயந்திரம் மூலம் இந்த இலைகள் கூழாக்கப்பட்டு, பினாடெக்ஸ் இழைகளாக மாறுகின்றன.

இந்த நார்களில் வண்ணங்களைச் சேர்த்து, வேண்டிய விதத்தில் பொருட்களை உருவாக்கிவிடுகிறார்கள். ’’விலங்குகள் தோல் பயன்படுத்தாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த பினாடெக்ஸ் பொருட்கள் இப்போதே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. சர்வதேச நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஷூக்கள், பைகளில் பினாடெக்ஸைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. இந்த இழைகளைப் பயன்படுத்தி காயங்களைச் சுற்றிப் போடும் பேண்டேஜ்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ’’ என்கிறார் ஹிஜோஸா.

அடடா! விலங்குகளின் தோலுக்கு மாற்றாக பினாடெக்ஸ்!

ஆஸ்திரேலியாவில் இளைஞர்கள் அதிக அளவில் புகைப்பழக்கத் துக்கு ஆளாகி வருகிறார்கள். இதில் பெண்களும் கணிசமாக இருக்கிறார்கள். புகைப்பழக்கம் தீங்கானது என்பதை பல்வேறு விதங்களில் எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கள். அதில் சிகரெட் அட்டைகளிலேயே, பெண்கள் புகைப்பிடித்தால் எடை குறைந்த குழந்தைகள் பிறக்கும் என்ற எச்சரிக்கையும் செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் இந்த எச்சரிக்கை எதிர்மறையான விஷயத்தை உருவாக்கி வருகிறது. குழந்தைகள் எடை குறைவாகப் பிறந்தால், பிரசவ வலி குறைவாக இருக்கும் என்று பெண்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் புகைப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள்.

மானுடவியல் ஆராய்ச்சியாளர் சிமோன் டென்னிஸ், ‘’குழந்தை வயிற்றில் இருக்கும்போது புகைப்பதால், குழந்தைக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. குழந்தையின் எடையும் குறைந்து விடுகிறது. சில குழந்தைகள் பிரசவ காலத்துக்கு முன்பே பிறந்து விடுகின்றன. சில குழந்தைகள் வயிற்றிலேயே இறந்து போகின்றன. சுவாசக்குழாய் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதயக்கோளாறுகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. நரம்புகளும் பாதிப்படைகின்றன. கருச்சிதை வும் அதிக அளவில் ஏற்படுகின்றன. 16, 17 வயது பெண்கள்தான் பிரசவ வலிக்குப் பயந்துகொண்டு இந்த முடிவை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை எடை குறைவாகப் பிறக்கும் என்ற எச்சரிக் கை, இப்படி ஒரு எதிர்மறையான செயலைச் செய்ய வைத்துவிட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது கவனம் தேவை’’ என்கிறார்.

புகை நமக்குப் பகை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x