Published : 13 Oct 2013 03:25 PM
Last Updated : 13 Oct 2013 03:25 PM

பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதி லத்தீப் பிடிபட்டார்

பாகிஸ்தான் தலிபான் மூத்த தலைவர்களில் ஒருவரான லத்தீப் மெஹ்சூதை அமெரிக்க படையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியதாவது:

“லத்தீப் மெஹ்சூதை அமெரிக்க படையினர் கைது செய்துள்ளனர். அவர், தெஹ்ரிக் இ தல்பானின் மூத்த கமாண்டர்களில் ஒருவர். 2010-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த இந்த அமைப்பு முயற்சித்தது. அமெரிக்காவை தாக்குவோம் என்றும் அந்த அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீது தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்றார்.

இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், கிழக்கு ஆப்கன் பகுதியில் அந்நாட்டு உளவுத் துறையினரால் லத்தீப் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களிடமிருந்து லத்தீபை அமெரிக்கப் படையினர் கைது செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டுக்குள் நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவது தொடர்பாக பேச்சு நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, அந்நாட்டின் தலைநகர் காபூலுக்குச் சென்றுள்ள நிலையில், லத்தீப் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

லத்தீப் மெஹ்சூத் கைது விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் நடவடிக்கை, ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய்க்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிபரின் செய்தித் தொடர்பாளர் அய்மல் ஃபைஸி கூறுகையில், “லத்தீபை அமெரிக்கப் படையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து பக்ராம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின், ஆப்கன் தேசிய பாதுகாப்பு இயக்குநரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேச இப்போதுதான் லத்தீப் மெஹ்சூத் ஒப்புக் கொண்டிருந்தார். லத்தீப்புடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்துவதை முக்கியமான நடவடிக்கையாக ஆப்கன் அரசு கருதியிருந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x