Published : 29 Jan 2014 11:51 AM
Last Updated : 29 Jan 2014 11:51 AM

“செலாக்” மாநாடு கியூபாவில் தொடங்கியது

லத்தீன் அமெரிக்க, கரீபியன் நாடுகளின் சமூகம் (செலாக்) மாநாடு கீயூபாவின் தலைநகர் ஹவானாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

லத்தீன் அமெரிக்க, கரீபியன் நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் வகையிலும், அமெரிக்க முயற்சியால் உருவாக்கப்பட்ட மற்றொரு பிராந்திய அமைப்பான அமெரிக்க நாடுகள் அவைக்கு (ஓஏஎஸ்) மாற்றாகவும் “செலாக்” 2011, டிசம்பரில் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா தவிர மேற்கு கோளார்த்தத்தில் உள்ள 33 இறையாண்மை நாடுகள் இதன் உறுப்பினர்களாக உள்ளன.

இந்நிலையில் செலாக் அமைப்பின் 2 நாள் மாநாடு ஹவானாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் 33 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். பாரம்பரிய பயிர்கள் சாகுபடி, கல்வியறிவு மேம்பாடு, பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள பாக்லேண்ட் தீவுகளுக்கு அர்ஜென்டினா உரிமை கோரும் விவகாரம் என பிராந்திய அளவிலான பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் விவாதித்தனர்.

இதுகுறித்து கியூபா வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் கூறுகையில், “பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தத் தீர்வு காணும் வகையில் அசாதாரண தன்மையுடன் இப் பேச்சுவார்த்தை நடைபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை தொடர்ந்து நாடுகளின் தலைவர்கள் மாநாடு தொடங்கியது. இம்மாநாடு புதன்கிழமையும் தொடருகிறது. அமெரிக்க நாடுகள் அவையின் (ஓஏஎஸ்) தலைமை இயக்குநர் ஜோஸ் மிகேல் இன்சல்சா இந்த மாநாட்டுக்கு பார்வையாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் செவ்வாய்க்கிழமை ஹாவானா வந்து சேர்ந்தார்.

மற்றொரு பார்வையாளரான ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் முன்னதாகவே கீயூபா வந்துவிட்டார்.திங்கள்கிழமை, நகரின் பல்வேறு இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். பின்னர், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகளும் தேசிய பாலியல் கல்வி மையத் தலைவருமான மேரிலா காஸ்ட்ரோவை சந்தித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x