Last Updated : 06 Feb, 2014 11:17 AM

 

Published : 06 Feb 2014 11:17 AM
Last Updated : 06 Feb 2014 11:17 AM

மேலாண்மை செயல்பாடுகள் - என்றால் என்ன?

திட்டமிடுதல், நிறுவுதல், தலைமையேற்றல், கட்டுப்படுத்துதல் என்று மேலாண்மைச் செயல்பாடுகள் பட்டியலிடப்படுகின்றன. மேலாண்மை பற்றிய அடிப்படைப் புத்தகங்கள் எல்லாம் இவ்வாறே எழுதப்பட்டன.

Henri Fayol என்ற பிரான்ஸ் நாட்டவர், ‘தொழிற்சாலையில் பொது நிர்வாகம்’ என்ற புத்தகத்தை 1916-ல் வெளியிட்டார். இது மேலாண்மை செயல்பாட்டைப் பற்றிய அடிப்படைப் புத்தகமாகக் கருதப்படுகிறது. இவர் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் மேலாண்மை இயக்குநராக இருந்த அனுபவத்தில் இப்புத்தகத்தை எழுதினார். திட்டமிடுதல் (planning), அமைத்தல் (organizing), ஆணையிடுதல் (commanding), ஒருங்கிணைத்தல் (co-ordinating) மற்றும் கட்டுப்படுத்துதல் (controlling) என்ற ஐந்து மேலாண்மைச் செயல்பாடுகளைப் பட்டியலிட்டார். மேலாண்மையாளர் எந்தத் துறையில் வேலைசெய்தாலும் இந்தச் செயல்பாடுகள் அவசியம்.

எதிர்காலத் தேவைகளைக் கருதி சில குறிக்கோள்களை நிர்ணயித்து அவற்றை அடைவதற்காக நடவடிக்கைகளை ஏற்படுத்துவதுதான் திட்டமிடல்.

தொழிலாளர்களை தேர்ந்தெடுத்து, பயிற்சிகொடுத்து, வேலைக்கு அமர்த்துவது, உள்ளீட்டு பொருட்களை வாங்குவது, இயந்திரங்களை நிர்மாணிப்பது என பலவற்றிற்கும் பணத்தை தேடி ஒவ்வொன்றிற்கும் பகிர்ந்தளித்தல் ஆகிய செயல்கள் ‘அமைப்பு’ என்பதாகும். ஒரு நிறுவனத்தில் மேலாளரின் கட்டளைக்கேற்ப வேலை செய்பவர்கள் அனைவரையும் நிறுவனத்தின் கொள்கைப்படி நடத்துவது மேலாளரின் கடமை.

அவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து கட்டளையிடவேண்டும். தன்னுடைய அதிகாரத்தை அடுத்த நிலையில் உள்ளவர்களுக்குக் கொடுப்பதும் (delegation) கட்டளையிடுதலின் முக்கிய அங்கம்.

ஒரு நிறுவனத்தின் எல்லா நடவடிக்கைகளையும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கச் செய்வது ஒருங்கிணைத்தலாகும். இது ஒரு தனித்துவமான மேலாண்மை செயலாக இல்லாமல், மற்ற செயல்பாடுகளின் ஓர் அங்கமாகவே இப்போது பார்க்கப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் செயல்திட்டம் சரியாக செயல்பட கட்டுப்பாடுகள் அவசியம். திட்டத்தை ஒட்டியே நிறுவனத்தின் உறுப்பினர்கள் செயலாற்றவேண்டும்.

மேலாளர் ஒரு தலைவராக இருந்து நிறுவனத்தின் எல்லா உறுப்பினர்களிடையே தொடர்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தவேண்டும். நிறுவனத்தின் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்து, ஒழுங்குபடுத்தி, செய்திகளை எல்லோருக்கும் எடுத்துச்சென்று சேர்ப்பது informational செயல். ஒரு தொழில் முனைவோராக எல்லா முடிவுகளையும் எடுக்கவேண்டிய செயல் மேலாளரிடம் உண்டு. இந்த இரு மேலாண்மை நிபுணர்களின் கருத்துகளும் இன்றுவரை விவாத பொருளாக இருப்பது, அவர்களின் சிந்தனைச் செழுமையைக் காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x