Published : 07 Mar 2017 11:15 AM
Last Updated : 07 Mar 2017 11:15 AM

இராக் அரசுப் படை, ஐஎஸ் தீவிரவாதிகள் கடும் சண்டை: மோசூலில் 2 லட்சம் பேர் இடம்பெயர்வு

இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள மோசூல் நகரை கைப்பற்ற அந்த நாட்டு அரசுப் படைகள் தீவிரமாக போரிட்டு வருகின்றன. இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெறுவதால் அந்த நகரில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த 2014 ஜூனில் மோசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அந்த நகரை மீட்க, கடந்த 2016 அக்டோபரில் மிகப்பெரிய போர் தொடுக்கப்பட்டது. கடந்த 6 மாத போருக்குப் பிறகு மேற்கு மோசூல் பகுதியை அரசுப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன.

அமெரிக்க கூட்டுப் படைகளின் ஆதரவுடன் இராக் அரசுப் படை தொடர்ந்து முன்னேறி வருகிறது. இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெறுகிறது. இதனால் மோசூல் நகரில் இருந்து சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மட்டும் 17 ஆயிரம் பேரும் மார்ச் 3-ம் தேதி 13 ஆயிரம் பேரும் மோசூலை விட்டு வெளியேறினர்.

பெரும் எண்ணிக்கையில் மக்கள் வெளியேறுவதால் இராக் அரசுப் படை அமைத்துள்ள அகதிகள் முகாம்கள் நிரம்பி வழிகின்றன. எனவே மீதமுள்ள மக்கள் குர்து படைகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதுகுறித்து இராக் அரசு வட்டாரங்கள் கூறியபோது, நாளொன்றுக்கு சுமார் 10 ஆயிரம் பேர் அகதிகள் முகாமுக்கு வருகின்றனர். அவர்களுக்கு போதிய இடவசதியை ஏற்படுத்தி கொடுப்பது மிகுந்த சிரமமாக உள்ளது என்று தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x