Published : 31 Dec 2013 12:00 AM
Last Updated : 31 Dec 2013 12:00 AM

மோசமான வானிலை:உறைபனியில் சிக்கிய கப்பலை மீட்பதில் சிக்கல்

அண்டார்க்டிகாவில் உறைபனியில் சிக்கியுள்ள கப்பலை மீட்கச் சென்ற ஆஸ்திரேலியன் பனி உடைப்புக் கப்பல், மோசமான வானிலை காரணமாக பணியைத் தொடராமல் நிறுத்தியுள்ளது. கடும் பனிப்பொழிவும், வேகமான காற்றும் வீசுவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

எம்.வி. அகாடமிக் ஷோகல்ஸ்கி எனும் ரஷிய ஆராய்ச்சிக் கப்பலில் 74 ஆய்வாளர்கள் அண்டார்க்டிக் பகுதிக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கடல்வழி ஆய்வாளர் டக்ளஸ் மாசன் கடந்த 1911-1914 ஆம் ஆண்டுகளில் பயணித்த அதே வழியில் இக்குழுவினர் பயணித்து, ஒரு நூற்றாண்டு காலத்தில் சுற்றுச்சூழல் மாறுபாடு எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, ஆஸ்திரேலியத் தீவான டாஸ்மேனியாவின் தலை நகர் ஹோபர்ட்டிலிருந்து 1,500 நாட்டிகல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, கடந்த செவ்வாய்க்கிழமை பருமனான பனிக் கட்டிகளை அடித்துக் கொண்டு வந்த காற்று, அவற்றைக் கப்பலைச் சுற்றி வீசிவிட்டுச் சென்றது. கடும் பனிப்பொழிவு காரணமாக அந்தப் பனிக்கட்டிகள் உறைந்து விட்டதால், எம்.வி. அகாடமிக் ஷோகல்ஸ்கி கப்பல் பனிக்கு இடையே சிக்கி, நகர முடியாமல் உள்ளது.

இக்கப்பலை மீட்க சீனாவைச் சேர்ந்த ஸ்னோ டிராகன் எனும் பனி உடைக்கும் கப்பலும், ரஷியாவைச் சேர்ந்த பனி உடைக்கும் கப்பலும் சம்பவ இடத்துக்குச் சென்றன. உறைந்திருக்கும் பனியை வெட்டி, வழியை உருவாக்குவதுதான் இக் கப்பல்களின் நோக்கம். ஆனால், இக் கப்பல்களால் பனிக்கட்டிகளை உடைத்து முன்னேற முடியவில்லை.

இதையடுத்து ஆஸ்திரே லியாவைச் சேர்ந்த ஆரோரா ஆஸ்திரேலிஸ் எனும், சிறந்த பனி உடைப்புக் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது. ஆரோரா ஆஸ்திரேலிஸ் கப்பலும், எம்.வி. அகாடமிக் ஷோகல்ஸ்கி சிக்கியுள்ள இடத்திலிருந்து 10 நாட்டிகல் மைல் தொலைவுக்கு அப்பால் நின்று விட்டது.

தற்போது மிக வேகமாக காற்று வீசுவதுடன், கடும் பனிப்பொழிவும் இருப்பதால், ஆஸ்திரேலிய மீட்புக் கப்பலால் தொடர்ந்து முன்னேற முடியவில்லை.

“மோசமான வானிலை காரண மாக, ஆரோரா ஆஸ்திரேலிஸ் கப்பல் திரும்பி, இயல்பான கடல்பகுதிக்கு வந்து விட்டது. எம்.வி. அகாடமிக் ஷோகல்ஸ்கி கப்பல் சிக்கியுள்ள பகுதியில் 30 நாட்டுகள் அளவுக்கு வேகமான காற்றும் பனிப்பொழிவும் இருக்கிறது. இதனால், தெளிவாகப் பார்க்க முடியவில்லை. காட்சிமை (விஸிபிலிட்டி) மிக மோசமாக உள்ளது” என ஆஸ்திரேலிய கடல்பகுதி பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிக்கல்

சீன பனி உடைப்புக் கப்பலில் உள்ள ஹெலிகாப்டர்கள் மூலம் எம்.வி. அகாடமிக் ஷோகல்ஸ்கி கப்பலில் சிக்கியுள்ளவர்களை மீட்கலாம் என மாற்றுத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அத்திட்டமும் கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட கப்பலுக்குள் போதுமான உணவு இருப்பதால், ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பி.டி.ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x