Last Updated : 22 Jan, 2014 11:53 AM

 

Published : 22 Jan 2014 11:53 AM
Last Updated : 22 Jan 2014 11:53 AM

ஆளுயர ஆயுதம்

ராவல்பிண்டியில் நேற்றைக்கு மீண்டும் ஒரு தற்கொலைத் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. மிகக் குரூரமாக நிகழ்த்தப்பட்டிருக்கும் இத்தாக்குதலில் சில குழந்தைகளும் இறந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. தாலிபன்கள் நிறுத்தப்போவதில்லை. நவாஸ் ஷெரீஃபின் பேச்சு வார்த்தை அழைப்புகளையெல்லாம் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளக்கூடத் தயாராயில்லை. ஒன்று நீ ஒழி, இல்லாவிட்டால் உன் தேசத்தை நான் ஒழிக்கிறேன் என்று சொல்லாமல், செய்து காட்டத் தொடங்கிவிட்டார்கள்.

என்ன செய்யவும் வக்கில்லாமல் கையைப் பிசைந்து கொண்டிருக் கிறது பாகிஸ்தான் அரசாங்கம். தாலிபன்களை தேசம் முழுதும் காற்றைப்போல், ஊழல்போல் நீக்கமற நிறையச் செய்தபோது இந்த அபாயத்தை யோசிக்கவில்லையா என்று கேட்பதற்கில்லை. சொ.செ.சூ வைத்துக்கொள்வதில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களை விஞ்ச நாளது தேதியில் பிரபஞ்சத்திலேயே யாருமில்லை.

பெரும்பாலும் குண்டு வைத்துத் தகர்ப்பதை மட்டுமே தனது போர்த்தொழிலுபாயமாகக் கைக்கொண்டிருக்கும் தாலிபன், தற்கொலைத் தாக்குதல்களில் அதிகம் ஈடுபட்டதில்லை. இந்த வருஷம் பிறந்ததில் இருந்துதான் அடுத்தடுத்து இந்த ரகத் தாக்குதல்கள் நிகழ்கின்றன. இலக்கை வெல்வதுடன் கூட ஒரு உயிரை பலி கொடுத்து அதனை சாதிக்கும்போது கிடைக் கிற கவனம் அவர்களுக்கு முக்கியமாகிறது.

பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையோர ஆதிவாசி மக்களிடமிருந்து தான் தாலிபன்கள் தங்கள் தற்கொலைப் போராளிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். யுத்தத் தில் அனாதையானவர்கள், அங்க ஹீனர்கள், ஓபியம் அடிமைகள் பிரதானமாக இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதாகத் தெரிகிறது. ஒரு போராளியாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் இந்த ரக இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து தனியே அழைத்துச் சென்று சித்தாந்தப் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள்.

பெரும்பாலும் சவூதி அரேபியா மற்றும் இராக்கிலிருந்து அழைத்து வரப்படும் மார்க்க அறிஞர்கள் மூலம் இந்த வகுப்புகள் நடத்தப்படு கின்றன. புனிதப்போரின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவம். அதில் பங்களிப்பதில் உள்ள சிறப்பு இத்தியாதிகள். ஆயுதமேந்திப் போரிடுவது மட்டுமா தியாகம்? ஆயுதமாகவே மாறுவதும் அதுதான்.

ஒசாமா பின் லேடன் உயிருடன் இருந்த காலத்தில் அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. முக்கியமான பயிற்சி முகாம்களில் இறுதி வகுப்புகள் நடக்கும்போது அதை வீடியோ எடுத்து வைத்துக்கொள்ளச் சொல்லுவார். எதிர்கால சந்ததிக்குப் போட்டுக்காட்டி சரித்திரம் சொல்லிக்கொடுக்க ஒரு வழி. ஓர் இணை இயக்கமாகவே அல் காயிதாவுடன் வளர்ந்த தாலிபன்களும் இந்த வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கி, தாங்கள் பங்குபெறும் பெரும்பாலான தாக்குதல்களுக்கான ஆயத்தங்களை வீடியோ எடுத்து வைப்பார்கள்.

மேற்படி தற்கொலைப் போராளிகளுக்கு சித்தாந்த வகுப்பு களுக்கு அடுத்தபடியாக இந்த வீடியோ திரையிடல்கள் ஒரு வகுப்பாகவே நிகழ்த்தப்படுவது வழக்கம். களத்தில் இறங்கி சாகசங்கள் புரிய வழியில்லாதவர்கள் தம்மையே ஆயுதங்களாக உருமாற்றிக்கொள்வதற்கான உணர்ச்சிகரப் பிரத்தியேக வகுப்புகள்.

இராக் மற்றும் பாலஸ்தீனில் உள்ள போராளி இயக்கங்கள் அளவுக்கு ஆப்கனிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இயங்கும் தாலி பன்கள் வசம் இன்னும் தற்கொலைப் போராளிகளின் எண்ணிக்கை சேரவில்லை. ஆனால் தற்கொலைத் தாக்குதல்கள் உண்டாக்கும் பலமான தாக்கத்தை எந்த ராக்கெட் தாக்குதலும் நிகழ்த்தாது என்பதை அவர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள்.

பாகிஸ்தானில் இனி இது அடிக்கடி நிகழத்தான் போகிறது. எல்லையோர ஆதிவாசி மகாஜனங்களைத் தாலிபன்களின் பிடியில் இருந்து முற்றிலுமாக நகர்த்தி வைக்காத பட்சத்தில் பாகிஸ்தான் இனி கொடுக்கப்போகிற விலை மிகப் பெரிதாகவே இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x