Published : 14 Oct 2014 10:47 AM
Last Updated : 14 Oct 2014 10:47 AM

உலக மசாலா - சிங்கக் குட்டியை வளர்க்கும் நாய்

மனைவியைத் தோளில் சுமந்துகொண்டு செல்லும் போட்டி வட அமெரிக்காவில் நடைபெற்றது. 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் போட்டிக்கு நல்ல வரவேற்பு! முழங்கால் அளவுக்குச் சகதியும் தண்ணீருமாக இருக்கும் பகுதியில், மனைவியைச் சுமந்துகொண்டு ஓடவேண்டும். மனைவியைச் சுமந்து செல்லும் போட்டி என்றாலும் கூட திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தோழியைக் கூடச் சுமந்து செல்ல முடியும். ஜெஸ்ஸி வால், தன் தோழி கிறிஸ்டினாவைச் சுமந்து சென்று சாம்பியன் பட்டம் பெற்றார்! சுமந்த எடையைப் போல ஐந்து மடங்கு அதிகமான பணம் பரிசாக அளிக்கப்பட்டது.

சுகமான சுமை!

காங்கோ நாட்டில் 17 வயது கிரேஸுக்கு வித்தியாசமான பிரச்சினை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வாயில் மிளகு அளவுக்கு உருவான கட்டி, கால்பந்து அளவுக்கு வளர்ந்துவிட்டது. கட்டி வளர வளர, வெளியில் செல்வதை நிறுத்திவிட்டார் கிரேஸ். தகுந்த மருத்துவம் செய்துகொள்ள அவருக்கு வசதி இல்லை. சாப்பிடவோ, மூச்சு விடவோ மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். கட்டியின் அளவு பெரிதாகிக் கொண்டே செல்வதைக் கண்டு மிகவும் பயந்து போயிருந்தார். ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம், கிரேஸுக்கு உதவ முன்வந்தது. நான்கு மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் கிரேஸின் கீழ்த்தாடை முற்றிலும் நீக்கப்பட்டது. செயற்கைப் பற்கள் வைக்கப்பட்டு, முற்றிலும் குணம் பெற இன்னும் ஆறு மாதங்களாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நலம் பெற வாழ்த்துகிறோம்!

போலந்தில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் பாரிஸ் என்ற சிங்கக் குட்டி பிறந்தது. தாயும் தந்தையும் ஏனோ குட்டியைக் கவனிக்கவில்லை. அந்த நேரம் கார்மென் என்ற நாய் 5 குட்டிகளை ஈன்றிருந்தது. நாயுடன் சிங்கக் குட்டியைச் சேர்த்தனர். எந்தவிதத் தயக்கமும் இன்றி சிங்கக் குட்டியை ஏற்றுக்கொண்டது கார்மென். நாய்க் குட்டிகளும் பாரிஸை ஏற்றுக்கொண்டன. சிங்கக் குட்டிக்குப் பால் கொடுப்பது, தலையைக் கோதிவிடுவது, நாக்கால் சுத்தம் செய்வது என்று ஒரு தாய்க்குரிய அனைத்து விஷயங்களையும் அன்போடு செய்கிறது கார்மென். சிங்கக் குட்டியால் ஒரே ஒரு பிரச்சினைதான் கார்மெனுக்கு, நாய்க் குட்டிகளை விட சிங்கக் குட்டிக்கு அதிக அளவில் பால் தேவைப்படுகிறது.

பெற்றால்தான் பிள்ளையா?

நியு ஆர்லியன்ஸில் பூச்சிகளுக்காகவே ஒரு பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. வண்டு, கரப்பான், குளவி, எறும்பு, கரையான், வண்ணத்துப்பூச்சி போன்ற ஆயிரக்கணக்கான உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. இந்தப் பூச்சிகளைப் பார்க்க வருகிறவர்கள் பூச்சிகளை உணவாகவும் சாப்பிட விரும்புகிறார்கள். அவர்களுக்காக சாக்லேட்டுடன் புழு, பூச்சிகளைச் சேர்த்து வித்தியாசமான உணவு வகைகளை வழங்குகிறார்கள். பூச்சிகளைச் சாப்பிடாதவர்களுக்குத் தனியாக உணவு கிடைக்கிறது.

கூச்சமின்றி பூச்சி உண்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x