Published : 01 Jan 2014 12:52 PM
Last Updated : 01 Jan 2014 12:52 PM

போர்க்குற்றம்: வங்கதேச கட்சித் தலைவர் மீது குற்றச்சாட்டு பதிவு

வங்கதேச விடுதலைப் போரின்போது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஜமாத் – இ – இஸ்லாமி கட்சியின் தலைவர் மீது சர்வதேச நீதிமன்ற தீர்ப்பாயத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1971-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து வங்க தேசத்தில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்தது. அப்போது ராணுவத்துக்கு ஆதரவாக இனப்படுகொலை, கொள்ளை, ஆள்கடத்தல், தீவைத்தல் உள்ளிட்ட செயல்களில் அப்துஸ் சுபான் (70) ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. அவரது சொந்த ஊர் அமைந்துள்ள பாப்னா மாவட்டத்தின் பல பகுதிகளில் 1971-ம் ஆண்டு ஏப்ரல் 31-ம் தேதி முதல் அக்டோபர் 30-ம் தேதி வரை இக்கொடூரச் செயலில் ஈடுபட்டார்.

இந்நிலையில், போர்க்குற்றம் தொடர்பாக விசாரித்து வரும் சர்வதேச தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஏ.டி.எம்.பாஸில் கபீர் செவ்வாய்க்கிழமை கூறுகையில், “அப்துஸ் சுபான் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது 9 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 28-ம் தேதி நடைபெறும்” என்றார்.

அப்போது நீதிமன்றத் தீர்ப்பாயத்தில் ஆஜராகியிருந்த சுபான், “நான் குற்றமற்றவன். என்னை விடுவிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

போர்க்குற்றம் புரிந்ததாக இதுவரை 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில், ஜமாத் – இ – இஸ்லாமி கட்சியை சேர்ந்த அப்துல் காதர் முல்லா மட்டுமே தூக்கிலிடப்பட்டார். மற்றவர்கள் அனைவரும் மேல்முறையீடு செய்து தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x