Published : 17 Mar 2014 01:53 PM
Last Updated : 17 Mar 2014 01:53 PM

பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம்; ரஷியாவுடன் இணைக்க விண்ணப்பம்

உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெறுவதாக அதன் தன்னாட்சிப் பகுதியான கிரிமியா திங்கள்கிழமை அறிவித்தது. மேலும் தங்கள் பகுதியை ரஷியாவுடன் இணைக்க விண்ணப்பம் செய்துள்ளது.

உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைவது தொடர் பான பொதுவாக்கெடுப்பு கிரிமியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 97 சதவீத வாக்காளர்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது வாக் கெடுப்புக்கான தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய தலைவர் மிகைல் மலேஷெவ் நிருபர்களிடம் கூறுகையில், “பொது வாக்கெடுப்பில் 96.8 சதவீதம் பேர் உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். வாக்கெடுப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் கூட வரவில்லை” என்றார்.தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து கிரிமியா நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூடியது. இதில் கிரிமியாவை சுதந்திர நாடாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“கிரிமியாவை இறையான்மை பெற்ற சுதந்திர நாடாக கிரிமிய தன்னாட்சி குடியரசின் உயர்நிலை கவுன்சில் அறிவிக்கிறது. இன்று முதல் உக்ரைன் சட்டங்களை கிரிமியா நடைமுறைப்படுத்தாது.

கிரிமியா எல்லைக்குள் இருக்கும் அனைத்து உக்ரைன் சொத்துக் களும் நாட்டுடைமை ஆக்கப்படும். அவை இனி கிரிமியாகுடியரசின் சொத்துக்கள் ஆகும்.

ஐ.நா. மற்றும் உலகின் அனைத்து நாடுகளும் கிரிமியாவை சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும். ரஷிய கூட்டமைப்பின் ஒரு உறுப்பினராக கிரிமியா குடியரசை ஏற்றுக்கொள்ளுமாறு ரஷிய கூட்டமைப்பிடம் கிரிமியா விண்ணப்பித்துக்கொள்கிறது” என்று அ்்தில் கூறப்பட்டுள்ளது.

“மார்ச் 30-ம் தேதி முதல் கிரிமியாவின் உள்ளூர் நேரம், மாஸ்கோ நேரத்துக்கு இணையாக மாற்றப்படும். இதன்படி 2 மணிநேரம் முன்கூட்டியே கணக்கிடப்படும்” என்று கிரிமியாவின் பிரதமர் செர்ஜி அக்சியோநோவ் அறிவித்துள்ளார்.

இதனிடையே பொது வாக்கெடுப்பு மற்றும் சுதந்திரப் பிரகடனத்துக்கு மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஷியாவை தண்டிக்கும் வகையில் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x