Published : 22 Sep 2013 07:48 PM
Last Updated : 22 Sep 2013 07:48 PM

பாக்.: பெஷாவர் தேவாலய இரட்டை குண்டுவெடிப்பில் 60 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவரில் கிறிஸ்தவ தேவாலயத்தைக் குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில், குழந்தைகள் உள்பட சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “வடமேற்குப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணம் பெஷாவர் நகரில் மிகவும் பழமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் உள்ளது. முக்கிய சந்தைப் பகுதியாக விளங்கும் அப்பகுதியில் எப்போதும் மக்கள் நெரிசல் மிகுந்து காணப்படும்.

வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலையில் பொதுமக்கள் தேவாலத்தில் வழிபாடு நடத்திவிட்டு வெளியில் வந்துள்ளனர். அப்போது, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் 45 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்ததில் உடலில் வெடிகுண்டுகளை கட்டி வந்த 2 பேர் இந்தத் தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது” என்றார். அதேநேரத்தில், இந்தத் தாக்குதலில் சுமார் 60 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேவாலயத்துக்கு வழிபாடு நடத்த வந்தவர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பெஷாவர் நகர ஆணையர் சஹிப்ஜதா முகமது அனிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சமீப காலமாக கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது பழமைவாத முஸ்லிம் அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x