Published : 14 Oct 2014 08:38 AM
Last Updated : 14 Oct 2014 08:38 AM

தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் அதிபர் ஆட்சி முறையை ரத்து செய்வேன்: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச பேச்சு

தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் அதிகாரங்கள் அனைத்தும் அதிபரிடம் குவிந்திருக்கும் வகையிலான தற்போதைய ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கூறினார்.

இலங்கையில் அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறை நடை முறையில் உள்ளது. இதை மாற்றி நாடாளுமன்றத்துக்கு, குறிப்பாக பிரதமருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை கொண்டு வரும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் ராஜபக்ச பேசியதாவது:

“தமிழ் தேசிய கூட்டணியும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும், தமிழ் ஈழம் என்ற பிரிவினைவாத கோரிக்கையை கைவிட வேண்டும்.

அவ்வாறு செய்தால், தற்போதுள்ள அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வரத் தயாராக இருக்கிறேன்.

கடந்த 30 ஆண்டுகளாக நடை பெற்ற தீவிரவாதச் செயல்களால், எண்ணற்ற உயிர்களையும் மட்டுமல்ல, குடியிருப்புகளையும் இழந்துள்ளீர்கள்.

விடுதலைப் புலிகள் நடத்தி வந்த வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

தீவிரவாதத்துக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதன் மூலம், எவ்வித அச்சமும், சந்தேகமுமின்றி சுதந்திரமாக நீங்கள் வாழ வழி செய்துள்ளோம். விடுதலைப் புலிகளை அழிப்பதற் குத்தான் ராணுவம் போரில் ஈடுபட்டதே தவிர, தமிழர்களுக்கு எதிராக அல்ல. இவ்வாறு அதிபர் ராஜபக்ச கூறினார்.

யாழ் தேவி ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியை அந்நாட்டின் பிற பகுதிகளுடன் இணைத்து வந்த யாழ் தேவி ரயில் சேவை விடுதலைப் புலிகள் தாக்குதல் காரண மாக 1990-ல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 2009-ல் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. 2010-ல் இலங்கை அதிபர் ராஜபக்ச அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பின்போது, வடக்கு ரயில்வேயை மறு சீரமைக்கும் திட்டம் உருவெடுத்தது. இதையடுத்து இந்திய அரசு வழங்கிய 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4800 கோடி) நிதியுதவியுடன் இலங்கை அரசு இந்த ரயில்பாதையை 2011-ல் சீரமைக்கத் தொடங்கியது.

மணிக்கு 120 வேகத்தில் செல்லும் வகையிலான ரயில்பாதை, பாலங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு இந்தியா தொழில்நுட்ப ஆதரவு அளித்தது.

சீரமைப்பு பணிகள் முடிவுக்கு வந்த நிலையில் இப்பாதையில் ரயில் போக்குவரத்து நேற்று தொடங் கியது. அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரயிலில், பளை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வரை இலங்கை அதிபர் ராஜபக்ச பயணம் செய்து, ரயில்சேவையை தொடங்கி வைத்தார்.

இப்பாதையில் ஓமந்தை கிளிநொச்சி இடையி லான ரயில்பாதை கடந்த ஆண்டு செப்டம்பரிலும், மேடவாச்சியா மது ரோடு இடையிலான ரயில் பாதை கடந்த மே மாதமும் திறந்து வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x