Published : 21 Feb 2017 10:31 AM
Last Updated : 21 Feb 2017 10:31 AM

உலக மசாலா: நத்தைக்கு மாற்று ஓடு அளித்த மருத்துவருக்கு நன்றி!

இஸ்ரேலின் ஹாக்ளினிகா கால்நடை மருத்துவமனையில் ஒரு பெண், நத்தையைக் காப்பாற்றும்படி கேட்டார். “எங்கள் மருத்துவமனையில் நத்தைக்கு மருத்துவம் செய்தது இதுதான் முதல் முறை. ஒரு பெண் தன் வீட்டுத் தோட்டத்தில் தெரியாமல் நத்தையை மிதித்துவிட்டார். பதறிப் போய் நத்தையை எடுத்துப் பார்த்திருக்கிறார். நத்தையின் உடலுக்கு எந்தவிதச் சேதாரமும் இல்லை. ஆனால் ஓடு உடைந்துவிட்டது. எங்களிடம் கொண்டுவந்தார். நாங்கள் அறுவை சிகிச்சை மூலம் நத்தையின் ஓட்டை நீக்கி, புதிய ஓட்டைப் பொருத்தி விட்டோம். ஆனாலும் முழுமையாகக் குணமடைய ஒரு மாதம் ஆகலாம். சுவையான இலைகள், காய்களை உணவாகத் தருகிறோம். வசதியான படுக்கை அமைத்திருக்கிறோம். சாப்பிடுவதும் ஓய்வெடுப் பதுமாக இருக்கிறது நத்தை. சவாலாக இருந்தாலும் இந்தப் பணி எங்களுக்கு நிறைவைத் தந்திருக்கிறது” என்கிறார் மருத்துவர்.

நத்தைக்கு மாற்று ஓடு அளித்த மருத்துவருக்கு நன்றி!

உலகம் முழுவதும் ஊஞ்சல் விளையாட்டுகள் இருந்தாலும் எஸ்டோனியா நாட்டைப் போல யாருமே ஊஞ்சல்களைப் பயன்படுத்துவதில்லை. இங்கே 360 டிகிரிகளுக்கு ஊஞ்சலில் சுற்றிவருகிறார்கள். எஸ்டோனிய மக்கள் ஊஞ்சல் விளையாட்டின் மீது அபரிமிதமான ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை சிறியதும் பெரியதுமாக ஊஞ்சல் விளையாட்டுகள் சர்வ சாதாரணமாக நடத்தப்பட்டு வருகின்றன. 1993-ம் ஆண்டு அடோ கோஸ்க் என்பவர் ஒரு ஜோடி ஊஞ்சல்களை உருவாக்கினார். அதுவரை இருந்த ஊஞ்சல்களில் இவை இரண்டும் மிகவும் உயரமானவை. இவற்றில் 360 டிகிரிகளுக்குச் சென்று வரமுடியும். இதை கைகிங் என்று அழைத்தனர். பார்ப்பதற்கு மிக எளிதான விளையாட்டாகத் தெரிந்தாலும் எளிதானதல்ல. கால்களை ஊஞ்சல் பலகையில் கட்டிக்கொண்டுதான் ஆடுகிறார்கள். மேலே செல்லச் செல்ல கம்பிகளைப் பற்றியிருக்கும் கைகளும் தோள்களும் வலியெடுக்க ஆரம்பித்துவிடும். ஊஞ்சல் செல்லும் போக்கை அறிந்து, உடலை வளைத்து, பிடியை விடாமல் நின்றால்தான் உச்சியில் தலைகீழாக நின்று, மீண்டும் கீழே வர முடியும். இந்த விளையாட்டுக்கு உடல் உறுதி, தைரியம் அதிகம் வேண்டும். மிக ஆபத்தான விளையாட்டும்கூட. அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தால், உயிர் பிழைப்பதே கடினம். சிறுவயதிலிருந்தே பயிற்சி செய்யும் சாகசக்காரர்களால் மட்டுமே கைகிங்கை விளையாட முடியும். 1997-ம் ஆண்டு அடோ கோஸ்க் தான் உருவாக்கிய கைக்கிங்கில் டெலஸ்கோப்பை அறிமுகம் செய்து, ஆபத்தையும் சற்றுக் குறைத்தார். இன்று அதைவிட உயரமான கைகிங் ஊஞ்சல்கள் வந்துவிட்டன. பல்வேறு வகையான போட்டிகளும் நடத்தப்பட்டுவருகின்றன. 360 டிகிரிகளுக்குச் சென்று திரும்புபவர்களே போட்டியில் வெற்றி பெற முடியும். பயிற்சி பெற்ற வீரர்களால்தான் எப்படி ஆடினால் உச்சத்தைத் தொட முடியும் என்பதைக் கணிக்க முடியும். தொழில்முறை விளையாட்டு வீரரான ரைலி லான்சலு, “நான் முதலில் 4 மீட்டர் உயரத்துக்குப் பயிற்சி செய்தேன். பிறகு 4.20 மீட்டர், 4.50 மீட்டர் என்று அதிகரித்தேன். ஆனாலும் போட்டியில் 4.20 மீட்டர் வரையே என்னால் செல்ல முடிகிறது” என்கிறார். எஸ்டோனியாவில் தேசிய அளவில் கைகிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மிக ஆபத்தான சாகச விளையாட்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x