Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM

சியாச்சினிலிருந்து ராணுவத்தை இந்தியா வாபஸ் பெற வேண்டும்

சியாச்சின் பனிமலை ராணுவமற்ற பகுதியாக வேண்டும். அங்கிருந்து படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அய்ஸாஸ் சௌத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என நம்புகிறோம். அர்த்தமுள்ள மற்றும் நிலையான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

காஷ்மீர் பிரச்னையால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூளும் அபாயம் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்திருந்தார். இந்தியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து காஷ்மீர் விடுவிக்கப்படுவதைக் காண விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சௌத்ரியிடம் கேட்ட போது, “ஆரம்பத்திலிருந்தே எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காஷ்மீர் மக்களுக்கு எங்களின் தார்மீக ரீதியான மற்றும் ராஜீய ரீதியான ஆதரவை எப்போதும் வழங்கி வந்திருக்கிறோம். எனவே, பிரதமரின் கருத்தில் புதிய விஷயம் எதுவும் இல்லை.

அதே சமயம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியான உறவு பேணப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் பிரதமர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னைக்கான தீர்வு என்பது பல்வேறு விஷயங்களிலும் உதவும் எனக் கருதுகிறேன்.

கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் எவ்வித கட்டுமானப் பணிகளும் இருக்காது. இது இரு தரப்பிலும் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான அனைத்துப் பிரச்னைகள் தொடர்பாக தற்போது நிலவும் அவநம்பிக்கையைக் களைய முன்வர வேண்டும். அந்த அவ நம்பிக்கைதான் இருநாடுகளையும் பிளவுபடுத்தி வைத்திருக்கிறது.

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பாகிஸ்தானின் நிலை அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்னைக்காக பாகிஸ்தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஐ.நா.வின் தீர்மானம் நிரந்தர தீர்வை அளிக்கும்.தற்போதைய பாகிஸ்தான் அரசு, இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்புகிறது. பிரதமர் அதற்குச் சாதகமான சமிக்ஞைகளை அளித்திருக்கிறார்.

இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படு வதன் மூலம் இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். காஷ்மீர் தொடர்பான பேச்சு வார்த்தையில் காஷ்மீரிகளின் தலைமை என்பதும் இணைந்தி ருக்கும் என நம்புகிறோம். இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக எங்கள் கவலைகளையும், காஷ்மீரிகளின் தலைமை தொடர்பான விவகாரத்தில் எங்களின் கருத்துகளையும் தெரிவித்திருக்கிறோம்.

சியாச்சின் பனிமலை

சியாச்சின் பனிமலைப் பகுதி ராணுவமற்ற பகுதியாக்கப்பட வேண்டும். அங்கிருந்து படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும். இதற்குத் தீர்வு கிட்டும் வாய்ப்பு 1989-92 ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் நெருங்கி வந்தது. சியாச்சின் பிரதேசத்திலிருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஈடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x