Published : 15 Sep 2018 07:55 AM
Last Updated : 15 Sep 2018 07:55 AM

உளவாளி மீதான விஷவாயு தாக்குதல் விவகாரம்: பிரிட்டன் குற்றச்சாட்டுக்கு ரஷ்ய அதிபர் மாளிகை மறுப்பு

உளவாளி மீதான விஷவாயு தாக்குதல் விவகாரத்தில் ரஷ்யாவை சேர்ந்த 2 பேருக்கு தொடர்புள்ளது என்று பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது. இதனை ரஷ்யா மறுத்துள்ளது.

ரஷ்ய உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் தனது பணிக்காலத்தின்போது பிரிட்டனுக்கு ரகசியமாக தகவல்களை அளித்து வந்தார். இதன்காரணமாக 2004-ம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2010-ல் அமெரிக்காவும் ரஷ்யாவும் பரஸ்பரம் உளவாளிகளை விடுதலை செய்ததில் செர்ஜி ஸ்கிரிபாலும் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு பிரிட்டனின் சாலிஸ்பரியில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த மார்ச் 4-ம் தேதி செர்ஜி ஸ்கிரிபாலும் அவரது மகள் யூலியாவும் அங்குள்ள ஓட்டலுக்கு சென்றபோது இருவர் மீதும் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக பிரிட்டிஷ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஷ்ய சுற்றுலா பயணிகள் அலெக்சாண்டர் பெட்ரோவ், ரஸ்லன் பாஷிரோவ் ஆகியோர் ஸ்கிரிபாலையும் யூலியாவையும் கொல்ல முயற்சி செய்தனர் என்று பிரிட்டிஷ் அரசு அண்மையில் குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், மாஸ்கோவில் நேற்று கூறியதாவது: பிரிட்டன் குற்றம்சாட்டும் நபர்கள் சுற்றுலா பயணிகள். அவர்களுக்கும் ரஷ்ய உளவு அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. விஷவாயு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவ ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் எங்கள் உதவியை ஏற்க பிரிட்டன் மறுத்துவிட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x