Last Updated : 08 Sep, 2018 01:09 PM

 

Published : 08 Sep 2018 01:09 PM
Last Updated : 08 Sep 2018 01:09 PM

நிறுத்துவோம்; இந்தியாவும் சீனாவும் வளர நாங்கள் மானியம் கொடுப்பதா?- டிரம்ப் ஆவேசம்

இந்தியாவும், சீனாவும் வளர்ந்துவரும் நாடுகள் என்ற பட்டியலில் இருந்து கொண்டு ஏராளமான மானியங்களை அனுபவிக்கின்றன. இந்த நாடுகளுக்கு நாங்கள் ஏன் நிதியுதவி அளிக்க வேண்டும், மானியத்தை நிறுத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் வர்த்தகப் போர் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவி, டாலருக்கு எதிராக பல்வேறு நாடுகளின் கரன்சி மதிப்பும் சரிந்து வருகிறது. இதற்கிடையே விரைவில் சீனாவின் இறக்குமதிக்கு கூடுதலாக 50 ஆயிரம் கோடி டாலர் வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது, சர்வதேச சந்தையில் மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிகாகோ மாநிலத்தில் உள்ள நார்த் டகோடா பர்கோ நகரில் நிதிதிரட்டும் நிகழ்ச்சி நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. இதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார்.

அப்போது உலக வர்த்தக அமைப்பு (டபிள்யு.டி. ஓ), இந்தியா, சீனா ஆகிய நாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசியதாவது:

உலக அளவில் சீனாவும், இந்தியாவும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடுகளாக உருவாவதற்கு உலக வர்த்தக அமைப்புதான் காரணம். அந்த அமைப்பைத்தான் குற்றம் சாட்டுவேன். நாம் இந்த இரு நாடுகள் தவிர்த்து இன்னும் பிற நாடுகளையும் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் வைத்திருக்கிறோம். ஆனால், சில நாடுகள் இன்னும் போதுமான வளர்ச்சி பெறவில்லை, அப்படி இருந்தும் கூட அனைத்து வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கு நாம் மானியம் அளிக்கிறோம்.

இதை நினைத்துப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கிறது. மற்ற சிறிய நாடுகள் வேண்டுமானால், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் எனலாம், ஆனால், சீனாவும், இந்தியாவும் மானியத்தை வாங்கிக்கொண்டு நாங்களும் வளர்ந்து வரும் நாடுகள் என்று சொல்கின்றன.

சீனாவும், இந்தியாவும் வளர்வதற்கு நாம்தான் பணத்தையும், மானியத்தையும் அளிக்கிறோம். இது வேடிக்கையாக இருக்கிறது. இவர்கள் வளர நாம் ஏன் மானியம் அளிக்க வேண்டும். அனைத்து மானியத்தையும் நிறுத்த வேண்டும், விரைவில் நிறுத்துவோம்.

நாமும் வளர்ந்து வரும் நாடுதான். நான் சொல்வது சரிதானே. இப்போதுவரை நாமும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைத் தான் கொண்டிருக்கிறோம். நானும் அமெரிக்காவை வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்க்க விரும்புகிறேன். மற்ற நாடுகளைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறோம். (இவ்வாறு கூறியவுடன் டிரம்புக்கு மக்கள் கைதட்டி வரவேற்றனர்)

எனக்குத் தெரிந்து உலக வர்த்தக அமைப்பு மிகவும் மோசமாகச் செயல்படுகிறது. பெரும்பாலானோருக்கு உலக வர்த்தக அமைப்பு என்றால் என்ன?, அதன் பணி என்ன? என்று தெரியவில்லை. உலக வர்த்தக அமைப்புதான் சீனாவை வளரவிட்டு வேடிக்கை பார்க்கிறது, அனுமதிக்கிறது.

நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தீவிர ரசிகன். அவரைச் சந்தித்தபோது, நாம் அனைத்து விஷயங்களிலும் நியாயமாக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

ஆனால், சீனா தன்னை வளர்த்துக் கொள்வதற்காக ஆண்டுதோறும் அமெரிக்காவிடம் இருந்து 50 ஆயிரம் கோடி டாலரை மானியமாக எடுத்துக்கொள்கிறது. இந்த மானியத்தை நிறுத்தப் போகிறேன்.

இவ்வாறு டிரம்ப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x