Published : 25 Sep 2018 05:07 PM
Last Updated : 25 Sep 2018 05:07 PM

இந்தியாவில் இருந்து 400 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்டு கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு

இந்தியாவில் இருந்து 400 ஆண்டுகளுக்கு முன்பு புறப்பட்டுச் சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கிய நிலையில் அதன் பாகங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான போர்ச்சுகலின் லிஸ்பன் நகரின் கடல் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் சமீபகாலமாக ஆய்வு செய்து வந்தனர். அந்த பகுதியில் மூழ்கிய கப்பல் ஒன்றின் பாகங்கள் கண்டறியப்பட்டன. ஆய்வில் அவை 400 ஆண்டுகளுக்கு முந்தையவை என தெரிய வந்துள்ளது.

அந்த கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் உடைந்த சில பாகங்களில், மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்கள், பித்தளை பீரங்கிகள், சில ஆடைகள், அலங்காரப் பொருட்கள், ரூபாய் நோட்டுகள், சில வகை செராமிக் பொருட்கள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அரிய கண்டுபிடிப்பு இது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு, 1575-ம் ஆண்டு முதல் 1625-ம் ஆண்டு வரை போர்ச்சுகீசியர்கள் இந்தியாவுடன் வாணிக தொடர்பு கொண்டிருந்தனர். குறிப்பாக தமிழகத்தின் மணப்பாடு உள்ளிட்ட தென்னிந்திய கடல் பகுதியில் இருந்து கோவா வரையிலும், போர்சுகீசியர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்திய பகுதிகளை கைபற்றி இங்கிருந்து பொருட்களை வாங்கி வாணிபம் செய்து வந்தனர்.

இந்தியாவில் இருந்து மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனைப் பொருட்கள், ஆடைகள், கலைப்பொருட்கள் போன்றவை இங்கிருந்து போர்ச்சுகல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். அவ்வாறு வாணிபம் நடந்தபோது, இந்தியாவில் இருந்து போர்ச்சுகல் நாட்டுக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற கப்பல் லிஸ்பன் நகருக்கு அருகே கடலில் மூழ்கியுள்ளது.

இந்த கப்பல் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றது, அதில் பயணம் செய்தவர்கள் போன்ற எந்த விவரமும் இதுவரை கிடைக்கவில்லை.

இதுகுறித்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்யவுள்ளனர். விரைவில் இதுதொடர்பான மேலும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலவே இந்த கப்பலில் அடிமைகளாக சிலர் அழைத்து வரப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. அவர்கள் யார் என்ற விவரங்களும் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x