Last Updated : 08 Sep, 2018 04:40 PM

 

Published : 08 Sep 2018 04:40 PM
Last Updated : 08 Sep 2018 04:40 PM

சிறுமி ஷெரின் மேத்யூ மரணம் எதிரொலி: வளர்ப்புப் பெற்றோர், உறவினரின் இந்தியக் குடியுரிமை ரத்து

அமெரிக்காவில் வளர்ப்புத் தந்தையால் இந்திய சிறுமி ஷெரின் மேத்யூ கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது வளர்ப்புப் பெற்றோர் மற்றும் உறவினர்களின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரக தலைவர் அனுபம் ரே இதுகுறித்துக் கூறும்போது, ''வெஸ்லி மேத்யூஸ், அவரின் மனைவி சினி மற்றும் வெஸ்லியுடைய பெற்றோர்களின் ஓசிஐ அட்டைகளை (வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கான இந்தியக் குடியுரிமை) ரத்து செய்கிறோம்.

அத்துடன் மேத்யூஸ் குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களான மனோஜ் டி ஆபிரகாம் மற்றும் நிஸ்ஸி டி ஆபிரஹாம் ஆகியோரின் இந்தியக் குடியுரிமைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

இதுதொடர்பான விசாரணையில் கொலையின் போதும் கொலைக்குப் பிறகும் மேத்யூஸ் குடும்பத்துடன் ஆபிரஹாம் குடும்பத்தினர் தொடர்பில் இருந்தனர். இதுதொடர்பாக இவர்கள் வழக்கு தொடர்ந்தால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கைச் சந்திக்க நேரிடும்.

சின்னஞ்சிறு குழந்தை ஷெரினை இந்தியா மறக்காது. மத்திய அரசு பராமரித்துவரும் தவறிழைத்தோர் பட்டியலில் (Blacklist) மேத்யூஸ் மற்றும் ஆபிரஹாம் குடும்பத்தைச் சேர்க்க, தூதரகம் பரிந்துரை செய்யும்'' என்று தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

அமெரிக்க இந்தியரான கேரளாவைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூ என்பவர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தனது வளர்ப்பு மகளான ஷெரின் மேத்யூவைக் (3 வயது, பேச்சு குறைபாடுடையவர்) காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்ததால் அவரை அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே விட்டதாகவும் சில மணி நேரம் கழித்துச் சென்று பார்த்தபோது ஷெரினைக் காணவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெஸ்லி மேத்யூவின் வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சுரங்கப் பாதையில் சிறுமி ஷெரினின் உடலை அமெரிக்க போலீஸார் கண்டெடுத்தனர். இதனைத் தொடர்ந்து வெஸ்லியிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில், ஷெரினை அடித்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, வெஸ்லியும் அவரது மனைவி சினியும் கைது செய்யப்பட்டனர்.ஷெரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்ததாக ஷெரினின் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இந்நிலையில் ஷெரினின் வளர்ப்புப் பெற்றோர் மற்றும் உறவினர்களின் இந்தியக் குடியுரிமையை மத்திய அரசு ரத்து செயய்ய உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x