Published : 15 Sep 2014 11:14 AM
Last Updated : 15 Sep 2014 11:14 AM

பிரிட்டிஷ் பிணைக் கைதி தலை துண்டிப்பு: ஐ.எஸ். அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

சிரியாவில் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட பிரிட்டிஷ் உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் தலையை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: "ஐ.எஸ். நடவடிக்கை மிகவும் கொடூரமானது, கோழைத்தனமானது. இந்த அமைப்பு விரைவில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதன் கொடூர செயல்பாடுகள் தடம் தெரியாமல் அழிக்கப்பட வேண்டும். சிரியாவில் மனிதாபிமான சேவை புரிபவர்களுக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துக் கொள்கிறது. சிரியா, இராக் மக்களுக்கு எதிராக கொடுமைகளை அரங்கேற்றி வருகிறது ஐ.எஸ். அமைப்பு. ஐ.எஸ். அமைப்பு பரப்பும் வன்முறை, வெறுப்பு தடம் தெரியாமல் அழிக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 3 பேர் கொலை:

சிரியாவில் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட பிரிட்டிஷ் பிணைக் கைதியின் தலையை துண்டித்து இஸ்லாமிக் ஸ்டேட் கிளர்ச்சிப் படையினர் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

சிரியா, இராக்கை இணைத்து புதிய நாட்டை உருவாக்க இஸ்லாமிக் ஸ்டேட் சூளு ரைத்துள்ளது. இரு நாடுகளிலும் கணிசமான பகுதிகளை அந்த அமைப்பு கைப்பற்றியுள்ளது.

அதனைக் கட்டுப்படுத்த இராக் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் அண்மையில் போர்க் களத்தில் குதித்தது. கடந்த சில வாரங்களாக இஸ்லாமிக் ஸ்டேட் முகாம்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக சிரியாவில் கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிகை யாளர்கள் ஜேம்ஸ் பாலி, ஸ்டீவன் ஆகியோரை இஸ்லாமிக் ஸ்டேட் கிளர்ச்சிப் படையினர் அண்மையில் கழுத்தை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர்.

அதே பாணியில் பிரிட்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸை அவர்கள் கொலை செய்து இணைய தளத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த கொடூர கொலையை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூ னும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x