Published : 20 Jun 2019 03:21 PM
Last Updated : 20 Jun 2019 03:21 PM

அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்

தங்கள் நாட்டு வான்வெளிப் பாதையில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் கடற்படை வியாழக்கிழமை கூறும்போது, ”எங்கள் வான்பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுடப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், எங்களின் தேசிய இறையாண்மையை மீறுவதாகவும், பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியது.

இதற்கு அமெரிக்கா தரப்பில், தங்களது ஆளில்லா விமானம் ஒன்று சுடப்பட்டதாகவும் அது சர்வதேச வான்வெளிப் பாதையிலேயே பறந்தததாகவும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஹார்மஸ் கடற்பகுதியில் ஃபஜைரா அருகே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மிகப்பெரிய மையத்தில் 4 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை ஈரான் பின்னணியில் ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது. இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஹார்மஸ் கடற்கரையில் கல்ஃப் ஆஃப் ஓமன் பகுதியில் எண்ணெய்க் கப்பல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் ஒரே மாதிரியாக உள்ளது. எனவே இந்தத் தாக்குதலை ஈரான்தான் நடத்தியுள்ளது என்று அமெரிக்கா மீண்டும் குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் திட்டவட்டமாக கூறி வந்தார்.

இந்நிலையில் இதற்கான ஆதாரத்தை அமெரிக்க கடற்படை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், ஈரானின் கடற்படையைச் சேர்ந்த ஊழியர்கள் துளையிடும் காட்சி பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புகைப்படங்களுடன் வெளியிட்டது.

தொடர்ந்து ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்துவரும் நிலையில் ஈரான் கடற்பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x