Last Updated : 22 Jun, 2019 01:55 PM

 

Published : 22 Jun 2019 01:55 PM
Last Updated : 22 Jun 2019 01:55 PM

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது புதிய பலாத்கார குற்றச்சாட்டு : பெண் எழுத்தாளர் புகார்

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் தன்னை கடந்த 1990களில் பலாத்காரம் செய்தார் என்று எழுத்தாளரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான ஜீன் காரோல்(வயது75) குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

 

கடந்த 1990களில் மன்ஹாட்டன் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் உள்ள அறையில் தன்னை பலாத்காரம் செய்தார் என்று நியூயார்க் மேகஜினில் எனும் இணையதளத்தில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார். ஜீன் காரெல் எழுதிய  புத்தகம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த சூழலில் காரெல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

 

நியூயார்க் மேகஜினில் அதிபர் ட்ரம்ப் குறித்து எழுத்தாளர் காரெல் எழுதிய கட்டுரையில் கூறுகையில், " கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் டிரம்ப் எனக்கு நன்கு அறிமுகமானவராக இருந்தார்.  அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கிவந்தேன். அப்போது ஒருநாள் மன்ஹாட்டன் நகரில் உள்ள ஒருவர்த்தக மையத்தில் நான் இருந்தபோது, அங்குவந்த ட்ரம்ப் என்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். ஆனால், அந்த சம்பவத்தைக் குறித்து அப்போது நான் வெளியில் யாரிடமும் கூறவில்லை. அந்த சம்பவம் நடந்தபோது அறையில் வேறு யாரும் இல்லை.

 

என்னுடைய நெருங்கிய பத்திரிகை நண்பர்கள் இருவரிடம் மட்டுமே நடந்ததைக் கூறினேன். அவர்கள் போலீஸில்  புகார் அளிக்க என்னிடம் ஆலோசனை தெரிவித்தனர். அதில் ஒரு நண்பர் நியூயார்க் போலீஸுக்கு தகவல் தெரிவிக்க முயன்றார் " எனத் தெரிவித்துள்ளார்.

 

அடுத்த ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அவர் மீது ஒரு பெண் பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பாக்கியுள்ளது.

 

கடந்த 2016-ம் ஆண்டில் அதிபர் தேர்தலின்போது டொனால்ட் ட்ரம்ப் மீது 12-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்கள். ஆனால், அனைத்துக்கும் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை, தன்னை இழிவுபடுத்தவே புகார்கள் கூறப்படுகின்றன எனக் கூறிய ட்ரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

 

அதேபோல அதிபர் தேர்தலுக்கு முன், வானொலி வர்ணனையாளர் ஒருவருடன் ட்ரம்ப் பேசும் ஒலிநாடா வெளியானது. அதில் 2005ம் ஆண்டு ஒரு பெண்ணை அவரின் அனுமதியில்லாமல் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக ட்ரம்ப் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பத்திரிகையாளர் காரெலின் குற்றச்சாட்டை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் விடுத்த அறிக்கையில், " எழுத்தாளர் காரெல் புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அவரின் புதிய புத்தகத்தை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

 

நான் ஒருபோதும் இதுபோன்ற பெண்ணை என் வாழ்நாளில் சந்தித்தது இல்லை. எழுத்தாளர் காரெலின் குற்றச்சாட்டுக்கு பின்னணியில் ஜனநாயகக் கட்சியின் தூண்டுதல் இருக்கிறது. இது போலியான செய்தி.

 

என்மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்கள் இல்லை, படங்கள் இல்லை, எந்தவிதமான வீடியோக்களும் இல்லை. யாரும் சாட்சியில்லை. அப்படி இருக்கும் போது இந்த குற்றச்சாட்டை எவ்வாறு எடுத்துக்கொள்வது" என மறுத்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x