Published : 10 Jun 2019 08:32 AM
Last Updated : 10 Jun 2019 08:32 AM

நிதி நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான்

நாடு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும்போது அதில் இருந்து மீள்வதற்கு கடன் வாங்குவது என்பது சாதாரண காரியமல்ல. பாகிஸ்தான் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தான் கேட்டதும் அள்ளிக் கொடுக்கத் தயாராக இல்லை.

தருவதாக ஒப்புக் கொண்ட 600 கோடி டாலரைக் கூட இப்போது தருவதற்கு தயங்கி வருகிறது. பொதுவாக கடன் கொடுக்கும்போது, வாங்கும் நாடுகளுக்கு பலவிதமான நிபந்தனைகளை சர்வதேச நிதியம் விதிக்கும்.

குறிப்பாக வளரும் நாடுகளில் மானியங்களைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்தும். இது அங்கிருக்கும் ஏழை மக்களைப் பெரிதும் பாதிக்கும். பாகிஸ்தான் ராணுவம் தானாகவே தனது பட்ஜெட்டைக் குறைத்துக் கொண்டதற்கு பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். உண்மையான நிலவரம் எல்லோ ருக்குமே தெரியும்.

ராணுவத்தின் பட்ஜெட் தொகை எவ்வளவு என இன்னமும் முடிவாக வில்லை. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் செலவிடப்பட வேண்டும். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, கடந்த 2018-ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளின் பட்டியலில், பாகிஸ்தான் 20-வது இடத்தில் இருக்கிறது. 1140 கோடி டாலரை செலவிட்டுள்ளது.

2004-ம் ஆண்டில் இருந்து இதுவரை மிகவும் அதிகம் செலவிடப்பட்டது இந்த ஆண்டில்தான். பாகிஸ்தானின் தீவிரவாதம் தொடர்பான நடவடிக்கை களை கவனிக்க நிதி நடவடிக்கை பணிக்குழு முடிவு செய்துள்ள இந்த நேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் தனது செலவுகளைக் குறைத்துக் கொள்ளும்படி வலியுறுத் தப்பட்டுள்ளது. இந்த பணிக்குழுவின் ஆய்வு ஜூலை மாதம் வருவதால், என்னாகுமோ என்ற பயத்தில் பாகிஸ்தான் இருக்கிறது.

ஏகப்பட்ட பாதுகாப்பு சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தான் ராணு வத்தின் செலவைக் குறைத்துக் கொள்ளும் முடிவை பிரதமர் இம்ரான் கான் பாராட்டியிருப்பது, உண்மையான சூழலை மூடி மறைக்கும் விளம்பர நோக்கம்தான். ராணுவமும் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் விரும்பினால்தான் எந்தத் தலைவரும் ஆட்சியே நடத்த முடியும் என்ற நிலையில் இருக்கும் நாட்டில், அந்த நாட்டின் ராணுவம் தானாகவே பெருந்தன்மையாக செலவைக் குறைத்துக் கொள்வதாகக் கூறியிருப்பது நம்பும்படியாகவா இருக்கிறது?

இதில் அடுத்த கட்ட சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எந்த செலவை ராணுவம் குறைக்கப் போகிறது என்பதுதான். தீவிரவாதத் துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்லி, உலக நாடு களிடம் இருந்து வாங்கும் நிதியை, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை வளர்க்கவே பாகிஸ்தான் பயன் படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இருக்கிறது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் தீவிரவாதத்தை ஒடுக்க அளித்த நிதியை, பாகிஸ்தான் எப்படியெல்லாம் பயன்படுத்தியது என்பதை அமெரிக்காவை கேட்டால் விலாவாரியாக எடுத்துச் சொல்லும்.

இம்ரான் கானுக்கு சர்வதேச நிதியம் விதித்திருக்கும் நிபந்தனைகள் எல்லாம் பிரச்சினையே இல்லை. ஆனால் நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகி, கடன் வாங்கினால்தான் ஆட்சியே நடத்த முடியும் என்ற சூழலில் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டி யிருக்கிறதே என்பதுதான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவிக்கு வந்ததில் இருந்தே, இம்ரானுக்கு ஒன்று மாற்றி ஒன்று கெட்ட செய்தியாகவே வந்து கொண்டிருக்கிறது. கடைசியாக வந்த கெட்ட செய்தி...

கராச்சி அருகே அரபிக் கடலில், பெரிதும் பேசப்பட்ட கச்சா எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு முயற்சி, கடைசியில் தோல்வியில் முடிந்துவிட்டது. எண்ணெய் கிணறுகள் துளையிடும் பணிக்காக, ஏறக்குறைய 10 கோடி டாலர்கள் செலவிட்ட பிறகு எண்ணெய் கிடைக்காததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.

பாகிஸ்தானின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1800 கோடி டாலராக உள்ள நிலையில், நாட்டின் பெட்ரோலியத் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்யும் போது, பொருளாதாரம் இன்னும் மோசமாகத்தான் செய்யும். இதுபோக, ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த கரன்சியான பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டாலருக்கு 150 ரூபாய் என்ற அளவில் சரிந்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் செலவுக் குறைப்பு நடவடிக்கை இந்தியாவில் இருக்கும் பாதுகாப்பு ஆய்வு நிபுணர்களை கவரவில்லை. இந்த நடவடிக்கையால், இந்தியாவுட னான தனது நிலையில் பாகிஸ்தான் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்கிறார்கள் அவர்கள். அதேபோல், ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பதையும் இந்தியா வுக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டி விடுவதையும் பாகிஸ்தான் நிறுத்தாது என்கிறார்கள்.

பாகிஸ்தான் நிர்வாகத்தில் இருக்கும் சில புத்திசாலிகள், தீவிரவாதத்துக்கு ஆகும் செலவுகளை நினைத்துப் பார்த்தாலே பாகிஸ்தானில் மட்டுமல்லாது தெற்கு ஆசியாவிலும் ஏன், உலகம் முழுவதிலுமே நல்ல மாற்றங்கள் ஏற்படும். பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதைப் போல், தீவிரவாத பிரச்சினை குறித்துப் பேசாமல், இரு நாடுகளுக்கு இடையிலும் எந்த உறவுக்கும் சாத்தியமில்லை.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x