Last Updated : 05 Jun, 2019 11:43 AM

 

Published : 05 Jun 2019 11:43 AM
Last Updated : 05 Jun 2019 11:43 AM

அமெரிக்க அரசின் கெடுபிடிகளால் ஹெச்1பி விசா வழங்குதல் கடந்த ஆண்டில் 10 சதவீதம் சரிவு

அமெரிக்க அரசின் பல்வேறு கெடுபிடிகளால், கடந்த 2018-ம் ஆண்டில் ஹெச்1பி விசா பெறுவோர் எண்ணிக்கை 10 சதவீதம் சரிந்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஹெச்1பி விசா இந்தியாவைச் சேர்ந்த ஐடி பணியாளர்களுக்குத்தான் அதிகம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை(யுஎஸ்சிஐஎஸ்) புள்ளிவிவரக் கணக்கின்படி, கடந்த 2017-ம் ஆண்டில் 37 லட்சத்துக்கு 3 ஆயிரத்து 400 பேருக்கு ஹெச்1பி விசா வழங்கப்பட்டது.

ஆனால் இது அமெரிக்காவின் பல்வேறு கெடுபிடிகளால் கடந்த 2018-ம் ஆண்டு 10 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது கடந்த 2018-ம் ஆண்டில் 33 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், ஹெச்1பி விசாவுக்கு ஒப்புதல் வழங்கும் அளவு 93 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து குடியேற்ற கொள்கை ஆராய்ச்சியாளர் சாரா பியர்ஸ் கூறுகையில், "ஹெச்1 திட்டத்தின் மூலம் விசா பெற்று அமெரிக்காவுக்கு வேலைக்கு வரும் வெளிநாட்டினரைக் குறைக்கும் வகையில் டரம்ப் அரசு பல்வேறு கெடுபிடிகளை விதித்தது. அதன்விளைவுதான் ஹெச்1பி விசா வழங்கும் அளவு குறைந்துள்ளது.

நடப்பு ஆண்டில்கூட ஹெச்1பி விசாவுக்கு ஒப்புதல் வழங்கும் அளவு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 85 சதவீதம் விசா ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்த முறை 79 சதவீதமாகக் குறைந்துவிட்டது

கடந்த 2017-ம் ஆண்டில் 40 லட்சத்து 3,300 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 2018- ம் ஆண்டில் 39 லட்சத்து 6,300 ஆக குறைந்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்க அரசு புதிய உத்தரவு  ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி,  விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதள முகவரி விவரங்களையும் இனி வழங்க வேண்டும் என்ற புதிய விதியைக் கொண்டுவந்திருக்கிறது.

இதுநாள் வரையில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் சமூக வலைதளக் கணக்குகள், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்றவை பெறப்பட்டு வந்தன. தற்போது அனைத்து நபர்களும் அந்தத் தகவல்களைக் குறிப்பிட வேண்டும்.

இதற்கு ஏற்ற வகையில் விசா விண்ணப்பப் படிவம் மாற்றப்பட்டிருக்கிறது. இது தவிர்த்து, குடும்ப உறுப்பினர்கள் யாராவது தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்ற தகவல்களையும் அளிக்க வேண்டும். தீவிரவாத ஊடுருவலைத் தடுப்பதற்காக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தால், அமெரிக்காவில் குடியேற விண்ணப்பிக்கும் 7 லட்சம் பேர் மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்குப் பயணிக்கும் 14 மில்லியன் பயணிகளும் பாதிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது. அரசு ரீதியாக பயணிப்பவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x